6,000 மருந்துகளுக்கு அதிகபட்ச சில்லறை விலை நிர்ணிக்க நடவடிக்கை



நாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ள சுமார் 6,000 மருந்துகளின் அதிகபட்ச சில்லறை விலைகளை நிர்ணயிப்பதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையின் தலைவர் வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

மருந்துகளுக்கு அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கும் நடவடிக்கை தொடர்ந்து இடம்பெற்று வருவதோடு, புதிய மருந்துகளுக்கு பதிவு அனுமதி வழங்கும் போதும் அல்லது ஏற்கனவே உள்ள பதிவுகளை புதுப்பிக்கும் போதும் விலை நிர்ணயிக்கப்படும். இதேவேளை, அதிக விலையுள்ள 13 மருந்துகளின் விலையை கட்டுப்படுத்த அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கையால் சுமார் 5.7 பில்லியன் ரூபாய் சேமிக்க முடியும். இந்த 13 மருந்துகளும் நீண்டகால நோய்களுக்கு சிகிச்சை பெறும் நோயாளிகளால் அதிகம் பயன்படுத்தப்படுபவையாகும். இதனால் தொடர்ந்து மருந்துகளை வாங்க வேண்டிய நோயாளிகளுக்கு செலவுச் சுமை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் 2024ஆம் ஆண்டில் அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் செலுத்திய விலையையும், இந்த ஆண்டு செலுத்தும் விலையையும் ஒப்பிட்டுப் பார்த்தபோது 5 பில்லியன் ரூபாய்க்கும் அதிகமான சேமிப்பு கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

எனினும், மேற்குறித்த சேமிப்புத் தொகையானது மருந்துகளுக்கான விலைக் கட்டுப்பாட்டினால் மட்டும் கிடைக்கவில்லை மாறாக தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையின் மூலமாக அதிகமான மருந்துகளுக்கு பதிவுகள் வழங்கப்பட்டமை, அரச வைத்தியசாலைகளுக்குத் தேவையான மருந்துகள் உரிய நேரத்தில் கோரப்பட்டமை மற்றும் மருந்துகளுக்கான கேள்விப்பத்திர நடவடிக்கைகள் உரிய நேரத்தில் இடம்பெற்றமை ஆகியவையும் முக்கியமான காரணங்களாக குறிப்பிட முடியும் என்றார்.