சிறுவர் மற்றும் முதியோர் தின வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
ஒரு நாட்டின் எதிர்காலம் சிறுவர்களின் கைகளில்தான் உள்ளது. அவர்களின் நலன் என்பது நாட்டின் அனைத்து மக்களின் பொறுப்பாகும்.
எதிர்காலத்தைக் கட்டியழுப்புவது என்பது நிகழ்காலத்தில் சிறுவர்களின் அபிவிருத்திக்காகச் செய்யப்படும் அர்ப்பணிப்பும் திட்டமுமாகும். தற்போது நமது நாட்டில் சிறுவர்கள் எதிர்கொள்ளும் பிரதான சவால்கள் கல்வி, சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு என்பனவாகும்.
அவர்களின் எதிர்காலத்தைக் கட்டியெழுப்ப வேண்டுமானால், எதிர்கால சவால்களை வெல்லக்கூடிய கல்வியை வழங்கும் ஒரு முறைமையை உருவாக்க வேண்டும்.
அது ஆரம்பப் பருவக் குழந்தை மேம்பாட்டிலிருந்து பாடசாலைக் கல்வி வரை விரிவான சீர்திருத்தத்திற்கு உட்படுத்தப்பட வேண்டிய ஒன்றாகும். கல்வி என்பது தொழிற்கல்வித் திறனைப்போலவே, ஒரு நல்ல பிரஜையை உருவாக்கும் நோக்கத்தையும் நிறைவேற்றும் ஒரு திட்டமாக அமைய வேண்டும்.
உலக சுகாதார அமைப்பின் தரவுகள் மற்றும் புள்ளிவிவரங்களின்படி, இலங்கையில் பெரும்பான்மையான குழந்தைகளுக்குச் சமச்சீர் உணவோ, சரியான ஊட்டச்சத்தோ கிடைப்பது கடுமையான பிரச்சினையாக மாறியுள்ளது. பாடசாலையை விட்டு விலகுவதற்கும் இக்காரணமே பிரதான காரணியாக அமைந்துள்ளது. அதேபோல், தாங்க முடியாத விலையேற்றத்தால் கல்விக்குத் தேவையான புத்தகங்களைப் பெற்றுக்கொள்வதும் இன்று குழந்தைகள் எதிர்கொள்ளும் கவலைக்குரிய நிலையாகும்.
மேலும், குழந்தைகளின் பாதுகாப்பிற்கு எழுந்துள்ள அச்சுறுத்தல்கள், அத்துடன் பொருளாதார நெருக்கடி மற்றும் அழுத்தங்களினால் குழந்தைகள் துஷ்பிரயோகங்களில் ஈடுபடுத்தப்படுவது குறித்துச் சரியான ஆய்வுகளை மேற்கொண்டு உரிய நடவடிக்கைகளை எடுப்பது அத்தியாவசியமானதாகும்.
பாதுகாப்பான எதிர்காலத்திற்காகப் படைப்பாற்றல் மிக்கதொரு சிறுவர் தலைமுறையை உருவாக்க வேண்டுமானால், இத்தருணத்தில் சிறுவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் சவால்களுக்குப் பொறுப்புடைமையுடையவர்களின் தலையீடு நிச்சயமாக இடம்பெற வேண்டும். நற்பண்புகளும் ஞானமும் நிறைந்த ஒரு குழந்தையை உருவாக்குவது, முதியோர் தலைமுறையினால் சமுதாயத்திற்கு ஆற்றப்பட வேண்டிய கடமையைச் சரியாகப் புரிந்து கொள்வதற்கு அவசியமானதாகும்.
மாறிவரும் தொழில்நுட்பத்தின் ஊடாக முதியோர்களும் குழந்தைகளும் எதிர்கொள்ளும் சமூக ஊடக சோகங்கள் குறித்தும், சிறுவர் தினம் மற்றும் முதியோர் தினத்தைக் கொண்டாடும் இத்தருணத்தில் கவனம் செலுத்த வேண்டியது முக்கியமானதொரு அம்சமாகும் எனக் குறிப்பிட வேண்டும்.
மாறிவரும் சமூகத்தில் உருவாகும் அணுகுமுறைகள் மூலம் குழந்தையையும் முதியோரையும் பாதுகாப்பதற்காக, ஒரு புதிய பரிமாணத்தில் அரச கொள்கைகள், சமூக விழுமியங்களுக்கு வழிகாட்டும் விகாரை, கோவில், பள்ளிவாசல் மற்றும் தேவாலயம் ஆகியனவும் தத்தமது கடமைகளையும் பணிகளையும் ஆழமாக ஆராய்ந்து புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்த விரும்புகிறேன்.
அத்துடன், சர்வதேச சிறுவர் தினம் மற்றும் முதியோர் தினத்திற்கு மட்டும் வரையறுக்கப்பட்ட நிகழ்ச்சிகளுக்கு அப்பாற்பட்ட ஒரு செயல் திட்டத்தின் தேவையை உணர்ந்து செயல்படுமாறு அனைத்துத் தரப்பினரிடமும் எதிர்க்கட்சி தலைவர் கோரியுள்ளார்.






.jpg)
.jpg)





