
முன்னாள் ஜனாதிபதியாக இருந்தாலும், முன்னாள் பொலிஸ் மா அதிபராக இருந்தாலும் அனைவருக்கும் சமமாக சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் நிலைமை உருவாக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் பிரதி அமைச்சர் சட்டத்தரணி சுனில் வடகல சுட்டிக்காட்டினார்.
கொழும்பில் இன்று சனிக்கிழமை (03) நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
நாம் அமைச்சு என்ற வகையில் நாட்டில் சட்டத்தையும் ஒழுங்கையும் பேணுவதுடன் தொடர்புடைய நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம். எமது நாட்டில் முன்னர் பிரபல நபர்களை பார்த்து சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட காலம் இருந்தது. அதேபோன்று பக்கச்சார்பாக சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட காலமும் இருந்தது.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்தால், பக்கச் சார்பாக சட்டத்தை நடைமுறைப்படுத்தாமல், அரசியலமைப்பின் 12 ஆவது உறுப்புரையில் குறிப்பிடப்பட்டுள்ள சட்டத்தின் முன்னிலையில் அனைவரும் சமம் என்ற கொள்கையின் அடிப்படையில் சட்டத்தை சமமாக நடைமுறைப்படுத்துவோம் என்ற மக்கள் ஆணையை நாம் பெற்றுள்ளோம்.
இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்து இரண்டு வருடங்கள் நிறைவடையும் நிலையில், சட்டத்தை நடைமுறைப்படுத்தும்போது முன்னாள் நிறைவேற்று ஜனாதிபதியாக இருந்தவராக இருந்தாலும், முன்னாள் பொலிஸ் மா அதிபராக இருந்தவராக இருந்தாலும், கிராமத்தில் இருக்கும் சிரிபால குணசிங்கவாக இருந்தாலும் அனைவருக்கும் ஒரே சட்டத்தை நடைமுறைப்படுத்தும் நிலைமை உருவாக்கப்பட்டுள்ளது.
தற்போது எவ்வித பாகுபாடுமின்றி அனைவருக்கும் சமமாக சட்டத்தை நடைமுறைப்படுத்த ஆரம்பித்துள்ளோம். நேற்று நீதிமன்றத்தில் மிகவும் வருந்தத்தக்க சம்பவமொன்றை நாம் கண்டோம். நாட்டின் சட்டத்துக்கு அனைவரும் கீழ்ப்படிய வேண்டியது அவசியமாகும். போதைப்பொருள் பாவனை மற்றும் வர்த்தகத்துடன் தொடர்புடையவர்களிடம் அந்த நடவடிக்கைகளில் இருந்து விலகுமாறு நாம் கோரிக்கை விடுக்கின்றோம். போதைப்பொருள் வர்த்தகர்களிடமும், போதைப்பொருளுக்கு அடிமையானவர்களிடமும் அந்த நடவடிக்கைகளில் இருந்து விலக வேண்டும் என்று கூறுகின்றோம்.
இந்த நாடு சட்டத்தை மதிக்கும் நாடாகவும், சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் நாடாகவும் இருக்க வேண்டும். நாட்டில் அனைத்து பிரஜைகளும் தமது உரிமைகளை அனுபவிக்கும் அதேவேளை, சட்டத்துக்கு உட்பட்ட வரம்புக்குள் தமது உரிமைகளை பாதுகாத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதேவேளை, போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையில் மருந்தக உரிமையாளர்களுக்கும் முக்கிய பொறுப்பு உள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் மருந்தக உரிமையாளர்களை அழைத்து அவர்களுடன் கலந்துரையாடி, போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும். மாவட்ட மட்டத்திலோ, தேர்தல் தொகுதி மட்டத்திலோ அல்லது தேசிய மட்டத்திலோ மருந்தக உரிமையாளர்களை அறிவுறுத்தும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டால், மருந்தக உரிமையாளர்களின் சங்கம் அதில் தலையிட்டு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
சில மருந்தகங்கள் போதைப்பொருள் விற்பனைக்காக பிரபலமாகியுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. குறிப்பிட்ட போதைப்பொருட்களை கொள்வனவு செய்வதற்கு குறிப்பிட்ட மருந்தகத்துக்கு செல்ல வேண்டும் என கூறப்படும் நிலைமையும் காணப்படுவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
இங்கு இருக்கும் பெரும்பாலான மருந்தக உரிமையாளர்கள் இவ்வாறான சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதில்லை என்பதை நான் அறிவேன். ஆனால் துரதிர்ஷ்டவசமாக இளைஞர்கள், மாணவர்கள் உள்ளிட்டவர்களை இலக்காகக் கொண்டு அவர்களை போதைக்கு அடிமையாக்கும் போதைப்பொருட்கள் சில மருந்தகங்களில் இருந்து விநியோகிக்கப்படுவதாக எமது அமைச்சுக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.
மருந்தகங்களின் பெயருக்கு மறைவாக வேறு சிலரும் இந்த போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன. அதேபோன்று ஆயுர்வேதத்துக்கு மறைவாகவும் சட்டவிரோத போதைத் தூண்டல் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. எனவே, இந்த நடவடிக்கைகளைத் தடுப்பதற்கு அனைவரும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்றார்



.jpg)








