தொலைபேசி சிறுவர்களின் எதிர்காலத்தை தீர்மானித்துவிடக்கூடாது : மலையக கல்வி அபிவிருத்தி மன்றம் எச்சரிக்கை!




சிறுவர்களின் கைகளில் வழங்கப்படும் தொலைபேசிகள் அவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் கருவியாக மாறிவிடக்கூடாது என மலையக கல்வி அபிவிருத்தி மன்றம் வலியுறுத்தியுள்ளது.

இன்றைய காலகட்டத்தில் தொலைபேசிகள் மற்றும் நவீன தொழில்நுட்ப சாதனங்கள் மாணவர்கள் மற்றும் சிறுவர்களின் தவிர்க்க முடியாத பொழுதுபோக்கு அம்சங்களாக மாறியுள்ளன. சில சிறுவர்கள் உணவைக்கூட தவிர்த்து தொலைபேசிகளுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கும் நிலை உருவாகியுள்ளதாகவும் மன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

பெற்றோர்கள் பயன்படுத்தும் தொழில்நுட்ப சாதனங்களின் நன்மை, தீமைகள் குறித்து சிறுவர்களுக்கு போதிய புரிதல் இல்லாத நிலையில், அவற்றின் பயன்பாடு அவர்களின் கல்வி மற்றும் அன்றாட வாழ்க்கையை பாதிக்காத வகையில் பெற்றோர்கள் உரிய கவனம் செலுத்த வேண்டும் என மன்றம் தெரிவித்துள்ளது.

கடந்த காலங்களில் விளையாட்டு மற்றும் இணைப்பாடவிதான செயற்பாடுகளில் ஆர்வமாக ஈடுபட்ட மாணவர்கள், தற்போது பாடசாலை முடிந்து வீடு திரும்பியதும் தொலைபேசியை எதிர்பார்த்துக் காத்திருக்கும் நிலை உருவாகியுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நவீன தொழில்நுட்பம் நன்மை, தீமை என இரு பக்கங்களையும் கொண்டுள்ளது. அதன் நன்மைகளை சிறுவர்கள் முறையாகப் பயன்படுத்துவதற்கு வழிகாட்டுவதுடன், தொழில்நுட்பப் பயன்பாடு அவர்களின் எதிர்காலத்தை பாதிக்காத வகையில் பெற்றோர்களும் சமூகமும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என மன்றம் வலியுறுத்தியுள்ளது.

“சிறுவர்களின் கைகளில் நாம் கொடுக்கும் தொலைபேசிகள் அவர்களின் எதிர்காலத்தை தீர்மானித்துவிடக்கூடாது. அவர்களின் கல்வி, விளையாட்டு, கலை மற்றும் இணைப்பாடவிதான செயற்பாடுகளுக்கு உரிய முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும்” என மலையக கல்வி அபிவிருத்தி மன்றத்தின் செயலாளர் வி.பி. ஏகாம்பரம் தெரிவித்துள்ளார்.

சிறுவர் தினத்தை முன்னிட்டு, சிறுவர்களின் பாதுகாப்பானதும் ஆரோக்கியமானதுமான எதிர்காலத்தை உறுதிப்படுத்துவதற்கு பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் சமூகத்தினர் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என மலையக கல்வி அபிவிருத்தி மன்றம் மேலும் கேட்டுக்கொண்டுள்ளது.