அமெரிக்காவின் கலிபோர்னியாவில் சிறுவர் திருமணங்கள் முற்றாகத் தடை: ஆளுநர் கவின் நியூசோம் வரலாற்றுச் சிறப்புமிக்க சட்டத்தில் கையெழுத்து!



அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் சிறுவர் திருமணங்கள் மற்றும் சிறார்களின் குடும்பக் கூட்டாண்மைப் பதிவுகளைக் முற்றாகத் தடை செய்யும் வரலாற்றுச் சிறப்புமிக்க 'Assembly Bill 1267' சட்டமூலத்தில் கலிபோர்னியா ஆளுநர் கவின் நியூசோம் புதன்கிழமை கையெழுத்திட்டுள்ளார்.

இதன் மூலம் கலிபோர்னியாவில் எந்தவித விதிவிலக்குகளுமின்றித் திருமணத்திற்கான குறைந்தபட்ச வயது 18 ஆக உத்தியோகபூர்வமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

சட்டமன்ற உறுப்பினர் கெயில் பெல்லரின் முன்வைத்த இச்சட்டம், பெற்றோர் அனுமதி அல்லது நீதிமன்ற அனுமதியுடன் சிறார்கள் திருமணம் செய்ய நிலவிய சட்ட விதிவிலக்குகளை முற்றாக இரத்து செய்கிறது.

'Global Hope 365' அமைப்பின் தரவுகளின்படி, 2000 முதல் 2021 வரை கலிபோர்னியாவில் மாத்திரம் சுமார் 35,000 சிறார் திருமணங்கள் நடந்துள்ளன. இவற்றில் பெரும்பாலானவை வயது குறைந்த சிறுமிகளுக்கும் வயதுவந்த ஆண்களுக்கும் இடையே நடைபெற்றவையாகும்.

கலிபோர்னியாவையும் சேர்த்து அமெரிக்காவில் இதுவரை 18 மாநிலங்கள் சிறுவர் திருமணத்தை எந்தவித விதிவிலக்குமின்றி முற்றிலும் தடை செய்துள்ளன.

தனது 16ஆவது வயதில், 51 வயது நடிகர் டக் கட்சிகனுடன் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து வைக்கப்பட்டுப் பாதிக்கப்பட்ட ஊடகப் பிரபலம் கோர்ட்னி ஸ்டாடன், ஆளுநர் கையெழுத்திடும் நிகழ்வில் நேரில் பங்கேற்றார்.

"நாங்கள் இந்தச் சுமையைத் தாங்க வேண்டிய கட்டாயத்தில் இருந்திருக்கக் கூடாது என்பதை ஆளுநரின் நடவடிக்கை உணர்த்தியுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமிகள் மீது எந்தத் தவறும் இல்லை; கலிபோர்னியாவில் வெற்றி கிடைத்துள்ளது, ஆனால் அமெரிக்காவின் அனைத்து 50 மாநிலங்களிலும் சிறுவர் திருமணம் தடை செய்யப்படும் வரை எனது போராட்டம் தொடரும்" என அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.