இலங்கை கிரிக்கெட்டின் வீழ்ச்சிக்குத் முற்றுப்புள்ளி வைக்க சீர்திருத்தங்கள் அவசியம்: இடைக்காலச் சபை அதிரடி அறிவிப்பு!

இலங்கை கிரிக்கெட் அணி சந்தித்து வரும் தோல்விகளுக்கு முன் சர்வதேச கிரிக்கெட் கௌன்சில் தரவரிசையில் பின்னடைவை சந்தித்திருப்பதாகவும், கிரிக்கெட் சீர்திருத்தக் குழு மேற்கொண்டு வரும் மாற்றங்களுக்கு மத்தியில் எதிர்காலத்தில் சிறந்த பெறுபேறை காண முடியும் என நம்புவதாகவும் இலங்கை கிரிக்கெட் சீர்திருத்தக் குழு தெரிவித்துள்ளது. 

ஐ.சி.சி. தரவிரிசை என்பது இலக்கம் மாத்திரமல்ல என்றும், அது தொடர்பில் அவதானம் செலுத்தி விளையாடுவது முக்கியம் எனவும் இலங்கை கிரிக்கெட் சபை தலைமையகத்தில் நேற்று (30) நடைபெற்ற ஊடக சந்திப்பில் இலங்கை கிரிக்கெட் இடைக்கால சபை தெரிவித்தது.

‘ஐ.சி.சி. தரவரிசை என்பது இலக்கம் மாத்தரமல்ல. உலகில் தற்போது நாம் இருக்கும் நிலையை விட முன்னேற வேண்டும். அது பற்றி எந்தக் கேள்வியும் இல்லை, சில கடினமான முடிவுகளை நாம் எடுக்க வேண்டி இருக்கும். தற்போதைய நிலையை எம்மால் ஏற்க முடியாது. எமது வீரர்களுக்கு திறமை உள்ளது. சீர்திருத்தக் குழுவின் முடிவுகளின்படி எதிர்கால நிலை மாறும்’ என்று குழு உறுப்பினரான ஜனாதிபதி சட்டத்தரணி டிலான் பிலிப்ஸ் தெரிவித்தார்.

‘கடந்த 12 ஆண்டு காலத்தில் இலங்கை கிரிக்கெட் அணி டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 ஆகிய மூன்று வகை போட்டிகளிலும் உலகின் முதல் மூன்று இடங்களில் இருந்தோம். நாம் இந்த நிலையை எட்டுவதற்கு சில மாற்றங்களை செய்து வருகிறோம்’ என்று கிரிக்கெட் சீர்திருத்தக் குழு தலைவர் எரான் விக்ரமரத்ன தெரிவித்தார்.

இலங்கை கிரிக்கெட் நிறுவனம் ஆண்டுக்கு 16 பில்லியன் ரூபா வருவாயை ஈட்டிய நிறுவனம் ஒன்று என்பதால், கடந்த சில ஆண்டுகளில் ஏற்பட்ட வரவு – செலவு தொடர்பில் தடயவியல் கணக்காய்வு நடவடிக்கையை மேற்கொள்வதற்கு தேசிய கணக்காய்வு நிறுவனத்திற்கு ஒப்படைக்கப்பட்டிருப்பதாக கிரிக்கெட் சீர்திருத்தத் தலைவர் தெரிவித்தார். அதற்காக விசேட விசாரணை ஒன்றை தேசிய கணக்காய்வு நிறுவனம் மேற்கொள்ளும் என்றும் அவர் குறிப்பிட்டார். இலங்கை கிரிக்கெட் வரவு – செலவு தொடர்பில் அறிக்கையை எந்தவொரு பொதுமகனுக்கும் பெற்றுக்கொள்ளும் வெளிப்படை நிலையை ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

‘நாம் கிரிக்கெட் நிர்வாகத்தை ஏற்ற நாள் தொடக்கம் பொதுமக்களின் நம்பிக்கையை உறுதி செய்ய வேண்டிய தேவை இருந்தது. சுவாதீனமான புத்திஜீவிகள் முகாமைத்துவத்தை உருவாக்குவது முக்கியமாகும். நாம் கொள்கை ரீதியான முடிவுகளை மாத்திரமே எடுக்கிறோம். சுதந்திரமானவர்களாலேயே முகாமைத்துவம் செய்ய வேண்டும். நிதி பொறுப்புகள் கணக்காய்வுக்கு உட்படுத்தப்பட்டு மேற்கொள்ளல் வேண்டும். சட்ட ஒழுங்குக்கு அமைய பணியாற்றும் கலாசாரம் முக்கியமானது. புதிய கிரிக்கெட் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் அபிவிருத்தி முறைகளை நாம் அடையாளம் கண்டுள்ளோம்’ என்று எரான் விக்ரமரத்ன மேலும் தெரிவித்தார். ஐ.சி.சி. யாப்பு வரைவு செயற்பாட்டுக்கு நேரடியாக தலையிடுவது இல்லை என்றும், இந்த ஆண்டில் பாராளுமன்றத்தில் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டு புதிய அதிகாரிகள் குழு ஒன்று நியமிக்க முடியுமாக இருக்கும் என்று சீர்திருத்தக் குழு உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் குமாரப்பெரும தெரிவித்தார். ‘விரைவில் தேர்தல் ஒன்றை நடத்தி சிறந்த நிர்வாகம் ஒன்றை உருவாக்குவதே எமது தேவையாக உள்ளது. இந்த ஆண்டு முடிவின்போது புதிய நிர்வாகம் ஒன்றை உருவாக்குவது எமது ஒரே நோக்கமாகும்’ என்றும் அவர் தெரிவித்தார்.