ஐ.நா. நீர் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் ஹரினிக்கு ஐக்கிய அரபு அமீரகம் அழைப்பு


ஐக்கிய அரபு அமீரகத்தில் எதிர்வரும் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகளின் நீர் மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு ஐக்கிய அரபு அமீரகத்தின் சார்பில் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவுக்கு உத்தியோகபூர்வ அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பிரதமர் ஹரினி அமரசூரியவுக்கும் இலங்கைக்கான ஐக்கிய அரபு அமீரகத்தின் தூதர் காலித் நாசர் அல் அமீரிக்குமிடையிலான பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போதே இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பின் போது தித்வா சூறாவளியைத் தொடர்ந்து இலங்கைக்கு ஐக்கிய அரபு அமீரக அரசாங்கம் வழங்கிய ஒத்துழைப்புக்களுக்கு பிரதமர் நன்றி தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, நீர் முகாமைத்துவம் மற்றும் நீர் பாதுகாப்பு தொடர்பான சவால்கள் குறித்தும் இரு தரப்பினரும் கலந்துரையாடியதுடன், நீர் தொடர்பான பிரச்சினைகளுக்கு நிலையான மற்றும் நீண்டகால தீர்வுகளை உருவாக்குவதன் முக்கியத்துவமும் இங்கு வலியுறுத்தப்பட்டது.

திறமைமிக்க தொழிலாளர்களின் புலம்பெயர்வு குறித்தும் கவனம் செலுத்தப்பட்டதுடன், சர்வதேச தொழில் சந்தையில் இலங்கை திறமையான தொழிலாளர்களுக்கான வாய்ப்புகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.

இலங்கையின் தொழிற்கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வித் துறைக்கு ஆதரவளிப்பதில் ஐக்கிய அரபு அமீரகம் காட்டும் ஆர்வம் குறித்தும் கலந்துரையாடப்பட்டதுடன், விவசாயத் தொழில்நுட்பம் மற்றும் அது சார்ந்த துறைகளில் ஒத்துழைப்பிற்கான வாய்ப்புகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

இலங்கையின் துறைமுகங்கள் மற்றும் விமானச் சேவைத் துறைகளில் ஐக்கிய அரபு அமீரக முதலீட்டாளர்கள் காட்டும் ஆர்வம் குறித்தும் தூதுவர் இங்கு குறிப்பிட்டார். இலங்கையை ஒரு பிராந்திய விமானப் பராமரிப்பு மையமாக அபிவிருத்தி செய்வதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாகவும், இதன் மூலம் முதலீடுகள் மற்றும் திறன் மேம்பாட்டிற்கான புதிய வாய்ப்புகளை உருவாக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கைக்கும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் மற்றும் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது மற்றும் விரிவுபடுத்துவது குறித்தும் இக்கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.