
காலி கோனபீனுவலை பிரதேசத்தின் அபிவிருத்திப் பணிகள், சட்டம் மற்றும் ஒழுங்கு, போக்குவரத்து நெரிசல், மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் ஆரச்சிக்கந்த வைத்தியசாலையின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது தொடர்பில் காலி கோனபீனுவலை பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் விசேட கவனம் செலுத்தப்பட்டது.
காலி கோனபீனுவலை பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் அதன் தலைவர், தொழிற்கல்வி பிரதி அமைச்சர் நளின் ஹேவகே தலைமையில் கடந்த 2ஆம் திகதி நடைபெற்றது. இந்நிகழ்வில் அம்பலாங்கொட பிரதேச சபையின் பதில் தலைவர் ஜனக சந்திரகுமார, எதிர்க்கட்சி பிரதிநிதிகள், பிரதேச செயலாளர், உதவி பிரதேச செயலாளர், திட்டமிடல் பணிப்பாளர் உள்ளிட்ட அரச அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இது தொடர்பாக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு, பிரதி அமைச்சர் அலுவலகம், தொழிற்கல்விப் பிரிவு நேற்று முன்தினம் சனிக்கிழமை (03 ) விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
காலி கோனபீனுவலை பிரதேச செயலாளர் பிரிவில் இதுவரை முன்னெடுக்கப்பட்டுள்ள அபிவிருத்திப் பணிகளின் முன்னேற்றம் தொடர்பில் கூட்டத்தில் விரிவாக மீளாய்வு செய்யப்பட்டது.
இதன்போது, பிரதேசத்தின் சட்டம் மற்றும் ஒழுங்கு நிலைமை, போக்குவரத்து நெரிசல் மற்றும் பயணிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டதுடன், அவற்றுக்கு தீர்வு காண்பதற்குத் தேவையான எதிர்கால நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
அத்துடன், தெற்கு மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் காலி கோனபீனுவலை பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ள வேலைத்திட்டங்களின் முன்னேற்றமும் மீளாய்வு செய்யப்பட்டது. குறித்த வேலைத்திட்டங்கள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் கூட்டத்தில் அவதானிக்கப்பட்டது.
மேலும், ஆரச்சிக்கந்த வைத்தியசாலையில் தற்போது காணப்படும் பிரச்சினைகள் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டதுடன், அவற்றைத் தீர்ப்பதற்குத் தேவையான எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.
பிரதேச மக்களின் அன்றாட வாழ்க்கையைப் பாதிக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதுடன், பிரதேசத்தின் அபிவிருத்திப் பணிகளை திறம்படவும் முறையாகவும் முன்னெடுத்துச் செல்வது தொடர்பிலும் கூட்டத்தில் விசேட கவனம் செலுத்தப்பட்டது.



.jpg)








.jpg)