கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு நாளை வரை விளக்கமறியல்


பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் கைது செய்யப்பட்ட பொது பல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரரை நாளை திங்கட்கிழமை (05) வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

களுத்துறை - தினியாவல பகுதியில் வைத்து கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் நேற்று சனிக்கிழமை (03) கைது செய்யப்பட்ட ஞானசார தேரர், இன்று ஞாயிற்றுக்கிழமை (04) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி பொதுமன்னிப்பை உயர் நீதிமன்றம் அண்மையில் இரத்துச் செய்ததைத் தொடர்ந்து, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்பான தண்டனையை நிறைவேற்றுவதற்காக நீதிமன்றத்தால் அவருக்குப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.