மொராக்கோ வரலாற்றில் புதிய அத்தியாயம்: நாட்டின் முதல் பெண் பிரதமராக பாத்திமா எஸ்ஸஹ்ரா அல் மன்சூரி நியமனம்!


மொராக்கோவின் வரலாற்றில் முதன்முறையாக பெண் ஒருவர் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார்.

50 வயதான சட்டத்தரணியான பாத்திமா எஸ்ஸஹ்ரா அல் மன்சூரியை மொராக்கோ மன்னர் ஆறாம் முகமது பிரதமராக நியமித்துள்ளார். செப்டெம்பர் 23 ஆம் திகதி நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அவரது Authenticity and Modernity Party (PAM) அதிக ஆசனங்களைப் பெற்றதைத் தொடர்ந்து இந்த நியமனம் இடம்பெற்றுள்ளது.

395 உறுப்பினர்களைக் கொண்ட பிரதிநிதிகள் சபையில் PAM கட்சி 97 ஆசனங்களைப் பெற்றது. எனினும், ஆட்சியமைக்க தேவையான 198 ஆசனங்களை அந்தக் கட்சி பெறாததால், புதிய அரசாங்கத்தை அமைப்பதற்காக கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

பிரதமராக நியமிக்கப்பட்ட பின்னர் தொலைக்காட்சியில் உரையாற்றிய எஸ்ஸஹ்ரா அல் மன்சூரி, தனது நியமனத்தை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகக் குறிப்பிட்டதுடன், நாட்டின் அரசாங்கத்தை ஒரு பெண் வழிநடத்துவது அனைத்து மொராக்கோ பெண்களுக்கும் பெருமைக்குரிய விடயம் எனத் தெரிவித்தார்.

யார் இந்த பாத்திமா எஸ்ஸஹ்ரா அல் மன்சூரி?

1976ஆம் ஆண்டு மொராக்கோவின் மராகேஷில் பிறந்த பாத்திமா எஸ்ஸஹ்ரா அல் மன்சூரி சட்டத்துறையில் கல்வி கற்றவர். பிரான்சின் மான்ட்பெல்லியர் பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி பட்டயத்தைப் பெற்றுள்ளதுடன், அமெரிக்காவின் நியூயோர்க் பல்கலைக்கழகத்தில் Anglo-Saxon வணிகச் சட்டத்திலும் பட்டயம் பெற்றுள்ளார்.

இளம் வயதிலேயே உள்ளாட்சித் துறையில் அரசியல் பயணத்தை ஆரம்பித்த அவர், 2009ஆம் ஆண்டு மராகேஷ் நகர மேயராகத் தெரிவுசெய்யப்பட்டார். இதன் மூலம் அந்த நகரின் முதல் பெண் மேயர் என்ற பெருமையைப் பெற்றார்.

2021ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலுக்குப் பின்னர் மீண்டும் மராகேஷ் மேயராகத் தெரிவுசெய்யப்பட்ட அவர், நாடாளுமன்ற உறுப்பினராகவும் பல தடவைகள் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

2021 ஒக்டோபரில் தேசிய நிலத் திட்டமிடல், நகர அபிவிருத்தி, வீடமைப்பு மற்றும் நகர்ப்புற கொள்கை அமைச்சராக நியமிக்கப்பட்டார். அமைச்சராகப் பணியாற்றிய காலத்தில் வீடமைப்பு மற்றும் நகர அபிவிருத்தி திட்டங்கள் உள்ளிட்ட முக்கிய திட்டங்களில் ஈடுபட்டதுடன், 2023ஆம் ஆண்டு அல் ஹவுஸ் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான மீள்குடியேற்ற நடவடிக்கைகளிலும் பங்களித்தார்.

புதிய அரசாங்கத்தை அமைக்கும் பொறுப்பு

செப்டெம்பர் 23ஆம் திகதி நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் PAM கட்சி அதிகபட்சமாக 97 ஆசனங்களைப் பெற்றது. இதனையடுத்து மன்னர் ஆறாம் முகமது, புதிய அரசாங்கத்தை அமைக்கும் பொறுப்பை எஸ்ஸஹ்ரா அல் மன்சூரியிடம் ஒப்படைத்துள்ளார்.

2008ஆம் ஆண்டு மன்னர் ஆறாம் முகமதுவின் நெருங்கிய ஆலோசகரான புவாட் அலி எல் ஹிம்மாவால் PAM கட்சி நிறுவப்பட்டது.

புதிய அரசாங்கம் பொருளாதார சீர்திருத்தங்கள், வேலைவாய்ப்பு உள்ளிட்ட உள்நாட்டு விவகாரங்களுடன், 2030 FIFA உலகக் கிண்ணத்திற்கான மொராக்கோவின் ஏற்பாடுகளையும் முன்னெடுக்கவுள்ளது. மொராக்கோ, போர்த்துக்கல் மற்றும் ஸ்பெயினுடன் இணைந்து 2030 உலகக் கிண்ணத்தை நடத்தவுள்ளது.

பாத்திமா எஸ்ஸஹ்ரா அல் மன்சூரியின் நியமனம், மொராக்கோவின் அரசியல் வரலாற்றில் பெண்களின் பிரதிநிதித்துவத்தில் முக்கியமான மாற்றமாக அமைந்துள்ளது.