
இலங்கையில் அதிகரித்து வரும் இணைய வழி நிதி மோசடிகளைக் கட்டுப்படுத்துவதற்காகச் சீன அரசாங்கத்துடன் இணைந்து கூட்டாகச் செயற்படுவது குறித்து இலங்கை மற்றும் சீன அதிகாரிகளுக்கிடையில் முக்கிய கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.
பொதுப் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் ஆனந்த விஜேபாலவுக்கும், இலங்கையிலுள்ள சீனத் தூதுவர் வெய் ஹவாசியாங்கிற்கும் இடையில் வியாழக்கிழமை பத்தரமுல்லையிலுள்ள அமைச்சில் இச்சந்திப்பு நடைபெற்றது.
தற்காலத்தில் பெரும் சவாலாக உருவெடுத்துள்ள இணையவழி நிதி மோசடிகளைத் தடுப்பதற்கு இரு நாடுகளும் இணைந்து எடுக்கக்கூடிய கூட்டு நடவடிக்கைகள் குறித்து இதன்போது சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது.
அத்துடன் இலங்கை மற்றும் சீனாவிற்கு இடையிலான நீண்டகால இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாகவும், பொதுப் பாதுகாப்புத் துறையில் எதிர்காலக் கூட்டுறவை விரிவுபடுத்துவது குறித்தும் இரு தரப்பினரும் விரிவாக ஆராய்ந்தனர். இந்த உயர்மட்டக் கலந்துரையாடலில் அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்னவும் கலந்துகொண்டார்.
கம்போடியா மற்றும் மியான்மர் போன்ற நாடுகளில் சைபர் குற்றங்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதால், சர்வதேச இணைய நிதி மோசடி அமைப்புகள் இலங்கையைக் இலக்காகக் கொண்டு செயல்படத் தொடங்கியுள்ளன.
கடந்த 2024 ஆம் ஆண்டில் மட்டும் இணைய நிதிச் சூதாட்டம் மற்றும் சர்வதேச வங்கி மோசடிகளில் ஈடுபட்டதாகக் கூறி 230 க்கும் மேற்பட்ட சீனப் பிரஜைகளையும் 200 க்கும் மேற்பட்ட ஏனைய நாட்டு பிரஜைகளையும் பொலிஸார் கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து, 2026 ஆம் ஆண்டில் மே மாதத்திலும் கொழும்பில் சட்டவிரோத இணைய மோசஎ மையங்களை நடத்தி வந்த 37 சீனப் பிரஜைகள் கைது செய்யப்பட்டனர்.
இவ்வாறான பின்னணியிலேயே, வெளிநாட்டுச் சந்தேகநபர்கள் மூலம் இலங்கையில் இயக்கப்படும் சைபர் குற்ற மையங்களை முற்றாக ஒழிப்பதற்கும் இரு நாடுகளின் பொலிஸ் மற்றும் பாதுகாப்புத் துறையினருக்கு இடையே தகவல்களைப் பரிமாறிக் கொள்வதற்கும் இந்த இருதரப்புப் பேச்சுவார்த்தை முக்கியத்துவம் பெறுகிறது.



.jpg)








.jpg)