
முல்லைத்தீவு மாவட்டசெயலகத்திற்கு அருகில், தற்போது இராணுவத்தின் பிடியிலுள்ள உப்புமால் வீதியை மக்கள் பாவனைக்காக விடுவிக்கவேண்டுமென வலியுறுத்திய வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், குறித்த வீதி விடுவிப்பின் முன்னேற்ற நிலைகுறித்தும் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்நிலையில் குறித்த உப்புமால் வீதியை விடுவிப்பது தொடர்பில் தாம் கலந்துரையாடல்களில் ஈடுபட்டுவருவதாக தெரிவித்த இராணுவ அதிகாரி, விரைவில் தமது நிலைப்பாடு அறிவிக்கப்படுமெனவும் தெரிவித்துள்ளார்.
கடந்த முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்திலேயே இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இதுதொடர்பில் மேலும் தெரியவருகையில்,
தற்போது மூடப்பட்டு பயன்பாடின்றிக் காணப்படும் முல்லைத்தீவு மாவட்டசெயலகத்திற்கு அருகிலுள்ள உப்புமால் வீதியை திறப்பது தொடர்பில் ஏற்கனவே முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனால் கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது.
குறிப்பாக கடற்கரைப் பகுதிகளில் ஆழிப்பேரலை போன்ற பேரனர்த்தங்கள் ஏதேனும் ஏற்பட்டால் செல்வபுரம், கோயில்குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளிலுள்ள மக்கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்கான ஒரு போக்குவரத்து மார்க்கமே உப்புமால் வீதி எனச் சுட்டிக்காட்டிய நாடாளுமன்ற உறுப்பர் ரவிகரன், அவ்வீதியை விடுவிப்பதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்குமாறும் வலியுறுத்தியிருந்தார்.
இந்நிலையில் அந்தப்பகுதியில் 591ஆவது படைப்பிரிவுத் தளபதியின் வதிவிடம் இருப்பதால், அந்த வீதி தடைசெய்யப்பட்டிருப்பதாகத் தெரிவித்த முல்லைத்தீவு மாவட்ட செயலாளர், அவ்வீதியை விடுவிப்பதற்கு இராணுவத்திடம் கோரிக்கை முன்வைக்கப்படுமெனத் தெரிவித்திருந்தார்.
இத்தகைய சூழலில் கடந்த 01.10.2026அன்று இடம்பெற்ற முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் குறித்த உப்புமால் வீதியை விடுவிக்க வலியுறுத்திய நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன், அவ்வீதியை விடுவிப்பதன் முன்னேற்ற நிலைதொடர்பிலும் கேள்வி எழுப்பியிருந்தார்.
இதன்போதே குறித்த உப்புமால் வீதியை விடுவிப்பதுதொடர்பான கலந்துரையாடல்களில் தாம் ஈடுபட்டுவருவதாக தெரிவித்த இராணுவ அதிகாரி, தமது நிலைப்பாடு விரைவில் அறிவிக்கப்படுமெனவும் தெரிவித்திருந்தார்.



.jpg)








.jpg)