இளைஞர்களை எதிர்கால தொழில் சந்தைக்கு தயார்படுத்த உயர்கல்வி, தொழிற்கல்வி துறைகள் வலுப்படுத்தப்படும் – பிரதமர் ஹரிணி



நாட்டின் இளைஞர் தலைமுறையினரை அறிவு, திறன்கள் மற்றும் புதிய வாய்ப்புகளால் வலுவூட்டுவதன் மூலம் எதிர்கால தேசிய அபிவிருத்திக்கான அடித்தளத்தைப் பலப்படுத்த முடியும் என்றும், அதற்காக உயர்கல்வி, தொழிற்கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வித் துறைகளைச் முனைப்பாக வலுவூட்டுவதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாகவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

கொழும்பு கோல்ஃபேஸ் ஹோட்டலில் இன்று (ஒக்டோபர் 03) நடைபெற்ற சர்வதேச தொழிற்கல்வி மற்றும் கல்விக் கண்காட்சியின் (iCEE 2026) ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

சுயாதீன தொலைக்காட்சி சேவை (ITN), ITN MMC Campus மற்றும் JJL International ஆகிய நிறுவனங்கள் இணைந்து ஏற்பாடு செய்த இக்கண்காட்சியின் ஊடாக, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் சீனா ஆகிய நாடுகளைச் சேர்ந்த 10 முன்னணி பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்வதற்கான வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர் பின்வருமாறு குறிப்பிட்டார்.

“பல்கலைக்கழகக் கல்விக்கு வழங்கப்படும் அதே பெறுமதி தொழிற்கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்விக்கும் வழங்கப்படும் கல்வி முறையொன்றை நாட்டில் நிறுவுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது. பாரம்பரியக் கல்வி முறைக்கு அப்பாற்பட்ட பாதையைத் தெரிவுசெய்துள்ள காரணத்தினால் எந்தவொரு மாணவரும் கைவிடப்படக்கூடாது.

செயற்கை நுண்ணறிவு, டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் தன்னியக்கமாக்கல் ஆகியவற்றின் காரணமாக உலகளாவிய தொழில் சந்தை வேகமாக மாற்றமடைந்து வருகிறது.

அதற்கேற்ப எமது இளைஞர்களைத் தயார்படுத்த வேண்டும். இந்நிலையில், விமர்சனச் சிந்தனை, படைப்பாற்றல், தொழில்நுட்ப அறிவு, தலைமைத்துவம் மற்றும் வாழ்நாள் முழுவதும் தொடர்ச்சியாகக் கற்றல் (Lifelong Learning) ஆகியவை எதிர்கால இளைஞர் தலைமுறைக்கு அத்தியாவசியமானவையாகும். இதற்காக அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, உயர்தரப் பரீட்சையில் மிகச் சிறந்த திறமைகளை வெளிப்படுத்தும் 200 மாணவர்களுக்கு சர்வதேச அனுபவங்களைப் பெற்றுக்கொள்வதற்காக 2025 முதல் 2033 வரையிலான காலப்பகுதிக்கு ரூ. 4,000 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. அதில், இவ்வாண்டிற்காக ரூ. 600 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று, உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்படும் மஹபொல மாதாந்தக் கொடுப்பனவு சுமார் 63,000 மாணவர்களுக்கும், புலமைப்பரிசில் கொடுப்பனவு சுமார் 29,000 மாணவர்களுக்கும் கிடைக்கும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக, வட்டியில்லா மாணவர் கடன் திட்டத்தின் 10 ஆவது கட்டத்தின் கீழ் 5,605 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். 2025 ஆம் ஆண்டிற்காக 7,000 மாணவர்களை இலக்காகக் கொண்டு இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

புதிய கல்விக் கொள்கையின் ஊடாக கல்வித்துறைக்கான நீண்டகால வேலைத்திட்டமொன்றை நாம் தயாரித்துள்ளோம். இதன் கீழ், வெளிநாட்டு மாணவர்களும் எமது நாட்டில் கல்வி கற்பதற்கான வாய்ப்புகளை நாம் உருவாக்கி வருகிறோம்.

ஒரு நாட்டின் உண்மையான பலம் அதன் பௌதிக வளங்களில் தங்கியிருக்கவில்லை. மாறாக, அறிவு, திறன்கள் மற்றும் படைப்பாற்றல் நிறைந்த செயற்திறமான மனித வளத்திலேயே தங்கியுள்ளது. எதிர்காலச் சவால்களை எதிர்கொள்வதுடன், எதிர்கால வாய்ப்புகளையும் தாமாகவே உருவாக்கிக்கொள்ளக்கூடிய இளைஞர் தலைமுறையொன்றை உருவாக்குவதே அரசாங்கத்தின் பிரதான நோக்கமாகும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் ஊடகத்துறை பிரதி அமைச்சர் கலாநிதி கௌஷல்யா ஆரியரத்ன, சுயாதீன தொலைக்காட்சி சேவையின் தலைவர் பிரியந்த வெதமுல்ல, பேராசிரியர் வசந்த அத்துகோரள உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அத்துடன், அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, சீனா உள்ளிட்ட நாடுகளின் பல்கலைக்கழகப் பிரதிநிதிகள், பெற்றோர்கள் மற்றும் பெருமளவிலான மாணவ, மாணவியரும் பங்கேற்றனர்.