விமர்சனங்களுக்கு மத்தியில் சேதமடைந்த புகையிரத பாதைகள் சீரமைப்பு – பிமல் ரத்நாயக்க



மண்சரிவு, புயல் என்பன காரணமாகப் பாதிக்கப்பட்ட புகையிரத பாதைகளை பல்வேறு விமர்சனங்களுக்கு மத்தியிலும் புகையிரத திணைக்கள ஊழியர்கள் சீரமைத்து முடித்துள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர மேம்பாட்டு அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

பேராதனை புகையிரத நிலையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார். 'டிட்வா' பேரிடர் காரணமாக சேதமடைந்த ரம்புக்கனை - கடிகமுவ, கடுகண்ணாவ, பேராதனை ஆகிய பகுதிகளில் உள்ள புகையிரத பாதையில் மீண்டும் புகையிரத போக்குவரத்தைத் ரேம்பிக்கும் முகமாக, கொழும்பில் இருந்து பேராதனை வரை புகையிரதத்தில் பயணித்த அவர் பேராதனைக்கு வருகை தந்தபோது அங்கு வைத்தே இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கண்டி புகையிரத பாதையில் பேராதனைப்பிரதேசத்தில் மகாவலி கங்கைக்கு குறுக்கே போடப்பட்டுள்ள புராதன இரும்புப் பாலத்திற்கு இணையாக மற்றொரு இரும்புப் பாலத்தைக் கட்டுவதற்கு திட்டமிடப்படுவதாகவும், அதற்கான தொழிலநுட்ப வடிவமைப்புப் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரவித்தார்.

அதே நேரம் தற்போது இயங்க முடியாத நிலையில் உள்ள இரும்புப் பாலத்தை அரசு நிறுவனம் மூலம் புனரமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும், அதன் புனரமைப்புப் பணிகள் நிறைவடைந்த பின்னர் கண்டி வரையிலான இரயில் சேவைகளை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் இங்கு தெரிவித்தார்.

சமூக வலைத்தளங்களில் சிலர் விமர்சனங்களை முன்வைத்தனர். எம்மால் புகையிரத சேவையைக் கூட சீரமைக்க முடியாதிருப்பதாகத் தெரிவித்திருந்தனர்.

இதனால் ஒட்டுமொத்த புகையிரத சேவை ஊழியர்களும் மனவேதனை அடைந்திருந்தனர். இருந்த போதிலும், காலதாமதமானாலும் விமர்சனங்களுக்கு மத்தியில் புகையிரத பாதைகளை சீரமைக்கும் பணியை புகையிரத சேவை ஊழியர்கள் செய்து முடித்ததாகக் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் போக்குவரத்து பிரதி அமைச்சர் டாக்டர் பிரசன்ன குணசேன, புகையிரத சேவைகள் பொதுமுகாமையாளர் கே. ரவீந்திர பத்மப்பிரிய ஆகியோருடன் சிரேஷ்ட அதிகாரிகள், பொறியாளர்கள், புகையிரத நிலைய அதிபர்கள் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.