
சிறுவர்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பில் இந்த ஆண்டின் முதல் 10 மாதங்களில் 776 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் சட்ட அமுலாக்கப் பிரிவின் பணிப்பாளர் சஜீவனி அபேகோன் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய குறித்த காலப்பகுதியில் சிறுவர்கள் மீதான பாலியல் வன்புணர்வு சம்பவங்கள் தொடர்பில் 192 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
அதேவேளை சிறுவர்களுக்கு எதிரான குறைந்தளவிலான பாலியல் துஷ்பிரயோகச் சம்பவங்கள் தொடர்பில் 418 முறைப்பாடுகளும் பாரதூரமான பாலியல் குற்றங்கள் தொடர்பில் மேலும் 133 முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளன.
சிறுவர்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களைத் தடுப்பதற்கு ஒட்டுமொத்த சமூகமும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியதன் அவசியத்தையும் சஜீவனி அபேகோன் வலியுறுத்தியுள்ளார்.












