
'ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களை தடுத்தல்' சட்டமூலத்தின் ஏற்பாடுகள் அரசியலமைப்புக்கு முரணல்ல, இந்த சட்டமூலத்தை சில திருத்தங்களுக்கு உட்படுத்தி பாராளுமன்றத்தில் சாதாரண பெரும்பான்மையின் மூலம் நிறைவேற்றிக்கொள்ள முடியுமென்று என்றும் உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளதாக சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன சபையில் அறிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற அமர்வின்போது தினசரி அறிவிப்புக்களை அறிவிக்கையில் மேற்கண்டவாறு அறிவித்தார்.
அங்கு அவர் மேலும் சபைக்கு அறிவிக்கையில்,
அரசியலமைப்பின் 121(1) ஆம் உறுப்புரையின் பிரகாரம் உயர்நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்தப்பட்ட 'ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களைத் தடுத்தல்' எனும் சட்டமூலம் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் வியாக்கியாணம் எனக்குக் கிடைக்கப்பெற்றுள்ளது.
இதன்படி 'ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களைத் தடுத்தல்' சட்டமூலத்தின் சரத்துக்கள் அரசியலமைப்புடன் முரண்படவில்லை என்பதுடன், பதில் சட்டமா அதிபரினால் குழு நிலையில் மேற்கொள்வதாக உறுதியளிக்கப்பட்ட திருத்தங்களையும் நீதிமன்றத்தினால் பணிக்கப்பட்ட திருத்தங்களையும் மேற்கொள்வதற்கு உட்பட்டு, பாராளுமன்றத்தின் சாதாரண பெரும்பான்மையினால் அதனை நிறைவேற்ற முடியும் என்று நீதிமன்றம் அறிவித்துள்ளது.
பதில் சட்டமா அதிபரினால் உறுதியளிக்கப்பட்டவாறு, சட்டமூலத்தின் நீண்ட தலைப்பு, முகவுரை மற்றும் 2 முதல் 66 (40 மற்றும் 60 பிரிவுகள் தவிர ) ஆகிய பிரிவுகள் குழு நிலையில் திருத்தப்பட வேண்டும்.
அதேபோல் பதில் சட்டமா அதிபரினால் உறுதியளிக்கப்பட்டவாறு, 6 ஆம் பிரிவு சட்டமூலத்திலிருந்து நீக்கப்பட வேண்டும் என்பதுடன், முதலாம் அட்டவணையிலிருந்து 15, 16, 17 மற்றும் 33 ஆகிய உருப்படிகள் நீக்கப்பட வேண்டும் என்றார்.












