சிறிமாவோவுக்கு ஜே.ஆர். செய்ததை மீண்டும் செய்யாதீர்கள் – அரசுக்கு தயாசிறி எச்சரிக்கை


அரசியல் எதிரிகளைத் தேர்தல் போட்டியிலிருந்து விலக்க குற்றவியல் விசாரணைகளையும் நீதிமன்ற நடவடிக்கைகளையும் பயன்படுத்த வேண்டாம் என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர அரசாங்கத்திடம் வலியுறுத்தினார்.

“எதிரிகளைத் தேர்தலில் சந்திக்கத் துணிவு வேண்டும். யாரைத் தேர்ந்தெடுப்பது என்பதை மக்களிடமே விட்டுவிடுங்கள்” என்று அவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

நாமல் ராஜபக்ஷ தொடர்பான வழக்கு நடவடிக்கைகளைச் சுட்டிக்காட்டிய அவர், ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் 149ஆவது பிரிவின் கீழ், இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் வழங்கும் சான்றிதழின் அடிப்படையில் ஒருவரை விளக்கமறியலில் வைக்கும் முன், அந்தச் சான்றிதழுக்கான ஆதாரங்களை ஆராய நீதவானுக்குப் போதிய அதிகாரம் உள்ளதா எனக் கேள்வி எழுப்பினார். குற்றத்தைத் தீர்மானிப்பது நீதிமன்றத்தின் பணி என்றும், விளக்கமறியலுக்கான காரணங்களை எதிர்த்து வாதிட ஒவ்வொரு குடிமகனுக்கும் வாய்ப்பு இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

22ஆவது திருத்தத்தின் கீழ், பதவியில் இருந்த உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு வயதை 65 இலிருந்து 67 ஆகவும், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு வயதை 63 இலிருந்து 65 ஆகவும் உயர்த்தியதையும் அவர் கேள்விக்குட்படுத்தினார். இந்த மாற்றத்தைப் புதிதாக நியமிக்கப்படும் நீதிபதிகளுக்குப் பயன்படுத்தியிருக்கலாம் என்றார். அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகள் எப்படித் தேர்வு செய்யப்படுகிறார்கள் என்பதற்கான விதிமுறைகளையும், தேர்வு செய்யப்பட்ட நீதிபதிகளின் பெயர்களையும் வெளியிட வேண்டும் எனவும் கோரினார்.

1980ஆம் ஆண்டு ஜே.ஆர். ஜயவர்தனவின் ஆட்சியில் சிறிமாவோ பண்டாரநாயக்கவின் குடியுரிமைகள் பறிக்கப்பட்டதால், அவரால் 1982 ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியவில்லை என்பதை தயாசிறி நினைவூட்டினார். அதே தவறு மீண்டும் நடக்கக்கூடும் என எச்சரித்த அவர், சிறிமாவோ 1994ஆம் ஆண்டு மீண்டும் பிரதமரானதையும் சுட்டிக்காட்டினார்.

அரசியல் சார்பு எதுவாக இருந்தாலும் நீதித்துறையின் சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும், அரசியல்வாதிகள், தொழிற்சங்கத் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் ஒரே சட்டப் பாதுகாப்பு கிடைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.