அமரர் இராசையா நாகலிங்கம் (அன்புமணி) அவர்களின் 31ம் நாள் கிரியை நினைவுப் பிரார்த்தனையும் நினைவு மலர் வெளியீடும்.

(ரவிப்ரியா)
மட்டக்களப்பு மாவட்டத்தின் சிரேஸ்ட எழுத்தாளரும் முன்னாள் வடக்கு கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலக ஓய்வுபெற்ற சிரேஸ்ட உதவி செயலாளருமான ஆரையம்பதியைச் சேர்ந்த அமரர் இராசையா நாகலிங்கம் (அன்புமணி) அவர்களின் 
31ம் நாள் கிரியை நினைவுப் பிரார்த்தனையும் நினைவு மலர் வெளியீடும் 11.02.2014 செவ்வாயன்று காலை 10 மணிக்கு நடைபெறும். ஆரையம்பதி நந்தகோபன் கலாசார மண்டபத்தில் முனாகனா (மு.கணபதிப்பிள்ளை) தலைமையில் நடைபெறும்.



      நாளைய எழுத்தாளர்களுக்கும் நல்லதொரு விடிவெள்ளி நீயே!

நாகலிங்கம் என்னும் நல்ல மனிதகுல இரட்சகன்
நாடறிந்த சகலதுறை மாண்புறு இலக்கியவாதி,
நாடு கடந்தும் இலக்கிய நல் மணம் பரப்பிய,
நாவண்மையிலும் இனிதான எங்கள் அன்புமணி!

நாலாபக்கமும் தன்னை நிலைப்படுத்திய, இலக்கிய நிபுணன்!
நாணல் போல் சவால்களுக்கு ஈடுகொடுத்து நிமிர்ந்தே நின்றவன்!
நாடிவரும் எழுத்தாளர்களின் எழுத்து நோய்களுக்கு திறமையாக,
நாடிபிடித்து உரிய பரிகாரம் பண்ணும் இலக்கிய வைத்தியர்!

'நான் எனக்காக அல்ல இந்த மண்ணுக்காகவே,-
நாதியற்ற மக்களின் நலன் காக்கவே' என்று-
நாட்டம் முழுக்க மக்கள், சமூக சேவையிலும்
நாற்றென இலக்கியம் விதைப்பதிலும் விருப்புடன் இயங்கினாய்!

நாடகம், சிறுகதை, நாவல், விமர்சனமென தேர்ந்து,
நாளும் பொழுதும் ஓயாதிருந்தது உன் பேனா!
'நான் என்ன வயோதிபனா'- என்பது போல்,
நாட்டில் இலக்கிய விழா நடக்குமிடமெல்லாம் நீ!

நாற்காலி ஒன்று முன்வரிசையில் உனக்கென்று இருக்க,
நாழிகை தவறாமல் கம்பீரமாக தரிசனம் தருவாய்!
நாலு வார்த்தை நலம் விசாரிக்காது விடவும்மாட்டாய்!
;நாராயணனே உன் நலம் காக்காமல் நழுவியதுமேனோ?

நாகம், லிங்கம், அன்பு, மணி ஆகியஎல்லாமே,
நாமத்திற்குள் இறைசக்தியாக இருந்திட்ட போதும்,
நாயுருவில் வந்த விதியே உனை வென்றதேனோ?
நாளைய எழுத்தாளர்களுக்கும் நல்லதொரு விடிவெள்ளி நீயே!

நாட்கள் நகர்ந்தாலும் நிலைத்திட்ட நின் நற்பணிகளால்,
நாயகனாக எம் நெஞ்சமதில் நீடித்தே இருப்பாய்!
நாம் இனி நிமிர்ந்து பார்த்தாலும் நிலவாகவே நீதெரிவாய்!
நாமெல்லாம் குனிந்து பார்த்தே உன் பாதம் பணிகின்றோம்!

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

உங்கள் ஆத்மசாந்திக்கு 'வற்றி நியூசும்,'
மானசீகமாகப் பிரார்த்திக்கின்றது!


-ரவிப்ரியா-

(அவர் விருது பெறுவதற்காக இறுதியாகக் கலந்து கொண்ட எழுத்தாளர் ஊக்குவிப்பு மையத்தின் (20.10.2013) பிரமாண்டமாக ஒழுங்கு செய்யப்பட்ட தமிழியல் விருது விழாவில் உயர் தமிழியல் விருதை தனதாக்கிக் கொண்ட போதும் தற்பெருமை ஏதுமின்றி தனனடக்கத்துடன் அவர் காட்சிதரும் நிகழ்வில்; பதிவான படங்களை அவர் பாதடிகளுக்கு காணிககையாக்குகின்றோம். படங்கள் உதவி   "A.V.K TASK Photo" )