மறைந்த இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.இராஜேந்திரனுக்கு கண்ணீர் அஞ்சலி!!!


(ரவிப்ரியா)
பழம்பெரும் தமிழ் நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் உடல் நலக்குறைவால் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் வெள்ளியன்று காலமானார். அவருக்கு வயது 85.

தமிழ் திரையுலகில் பராசக்தி திரைப்படம் மூலம் பிரபலமடைந்த இவர்இ ரத்தக் கண்ணீர்இ ரங்கூன் ராதாஇ சிவகங்கைச் சீமை போன்ற நூற்றுக்கணக்கான திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இலட்சிய நடிகர் என்று அவர் பிரபலமாக அறியப்பட்டார். கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்கள் தமிழக அரசியலில் இருந்து செயல்பட்டார். பின்பு அரசியலிருந்து ஓய்வுபெற்ற அவர்இ திரையரங்கு, படப்பிடிப்பு ஸ்டூடியோ மற்றும் ஒலிப்பதிவு தியேட்டர் ஆகியவற்றை நிறுவி நிர்வாகித்து வந்தார்.
நுரையீரல் தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி வெள்ளியன்று காலை உயிரிழந்தார்.



  இரக்கமுள்ள தமிழ் உணர்வாளன், இலட்சிய நடிகருக்கு,
    இதயபூர்வமான வெற்றிநியுஸ்சின் நினைவஞ்சலி!

  இலட்சியம் இழக்காத இதமான நடிகன் நீ!;
  இமயமாக இருந்த சிவாஜி, எம்.ஜி.ஆரென,
  இரு திலகங்களுடனும்  இணைந்து நடித்து,
  இரசிகர்களை ஈர்த்து இடம் பிடித்தவன் நீ!

  இலங்கை ரசிகர்களை 'சாரதா' மூலம்,
  இனம்காட்டி, 'பூம்புகார்' மூலம் பூரணத்துவமாக்கி,
  இலக்கிய வேங்கை கலைஞரின் வசனங்களுக்கு.
  இரட்டிப்பு உயிர் கொடுத்து உயர்ந்து நின்றாய்!

  இளைஞர்களுக்கு ' கைகொடுத்த தெய்வமாய்',
  இன்றும் பேசப்படும் கனதியான 'பராசக்தியாய்'.
  இல்லத்தரசிகளின் அபிமான நடிகராய்,
  இலட்சோப இலட்சம் இரசிகர்களை கவர்ந்தவன் நீ!

  இறுதிவரை பகுத்தறிவு காத்து பரப்பி,
  இரண்டறக் கலந்திருந்தாய் திராவிட கழகங்களில்,
  இம்மியளவும் கொள்கையை விட்டுக் கொடுக்காது,
  இரட்சகராம் அறிஞர் அண்ணாவின் வழி நடந்தாய்!

  இரக்கமுள்ள தமிழ் உணர்வாளன் நீ
  இனப்பற்றுடன் அரசியலிலும் உயர்ந்துதான் நின்றாய்!
  இரட்டை இலையிலும், உதய சூரியனிலும்,
  இளைப்பாறாமல் மக்கள் சேவை செய்தவன் நீ!

  இதமான உன் இனிய குரலால் தமிழே தேனானது!
  இயற்கையான உன் நடிப்பு என்றுமே எமது நினைப்பானது!

  இன்னமும் இதயத்திரையில் உனக்கோர் இருக்கை.!
  இடைவேளைதான் உன் மரணம்.! திரைதான் விலகிடுமோ?