பயங்கரவாத குண்டுத் தாக்குதலில் உயிர் நீத்த உறவுகளின் 31ம் நாள் நினைவஞ்சலி



உயிர்த்த ஞாயிறன்று மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் நடாத்தப்பட்ட பயங்கரவாத குண்டுத் தாக்குதலில் உயிர் நீத்த உறவுகளின் 31ம் நாள் நினைவஞ்சலி நிகழ்வு கல்லடி பொது மக்களால் கல்லடி உப்போடையில் அமைந்துள்ள துளசி மண்டபத்தில் 21-05-2019ம் திகதி காலை 9.00 மணிக்கு நடைபெற்றது.

நொச்சிமுனை கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் ஆறுமுகம் பஞ்சலிங்கம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்வில் மட்டக்களப்பு மாநகர முதல்வர், பிரதேச சபைகளின் உறுப்பினர்கள், உள்ளூர் பிரமுகர்கள், உயிர் நீத்தவர்களின் உறவுகள், பொதுமக்கள் எனப் பலர் பங்குபற்றினர்.

மௌன இறைவணக்கம், ஆத்ம சாந்திப் பிரார்த்தனை என்பவற்றைத் தொடர்ந்து மெழுகு தீபம் ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது. முதலாவது தீபத்தை மாநகர முதல்வர் ஏற்ற அதனைத் தொடர்ந்து சீயோன் ஆலயப் பிரதிநிதி, உயிர் நீத்தவர்களின் உறவுகள் மற்றும் பொது மக்களும் தீபங்களை ஏற்றி அஞ்சலி செலுத்தினர். தீபம் ஏற்றுதலைத் தொடர்ந்து நினைவுரை நடைபெற்றது. மத ரீதியான, இன ரீதியான பாடசாலைகள் உருவாவதை இனிவரும் காலத்தில் வரவேற்கக்கூடாது, ஒவ்வொரு மதமும் மற்றைய மதங்களை மதிக்கப் பழகிக் கொண்டால் உயிர்த்த ஞாயிறன்று ஏற்பட்ட அனர்த்தம் போன்று நாட்டில் ஏற்படாது என மாநகர முதல்வர் தி.சரவணபவன் தனது உரையில் குறிப்பிட்டார்.

இதனைத் தொடர்ந்து ஒன்றியத் தலைவர், ஆலய முகாமையாளர், உள்ளூர் பிரமுகர்கள் உரையாற்றினர். இறுதியாக ஒழுங்கமைப்புக் குழு சார்பாக இரா.முருகதாஸ் அவர்கள் நன்றியுரை வழங்கினார்.