கல்வி எனும் கருமத்தொடரினால் எய்தக் கூடிய முடிவு நிலையே கல்வியின் நோக்கம் எனப்படும். நோக்கம் பரந்துபட்டதாகும். அதனை அடையும் முயற்சியில் அமையும் சிறிய செயலின் முடிவு நிலையே குறிக்கோள் எனப்படும். அதாவது இறுதி நோக்கத்துள் அமைந்திருக்கும் சிறு குறுகிய இலக்குகளே ஆகும். கல்விக்கான முழு உலகத்திற்கும் பொருத்தமான நோக்கம் ஒன்றினை எடுத்து கொள்ள முடியாதுள்ளது. ஏனெனில் ஒவ்வொரு நாட்டினதும் வாழ்க்கைத் தத்துவம் வேறுபடுகின்றது. கல்வியின் நோக்கம் ஒவ்வொன்றும் வாழ்க்கைத் தத்துவத்துடன் பின்னிப்பினைந்துள்ளது. ஒரு நாட்டின் வாழ்க்கை தத்துவம் இன்னோரு நாட்டின் வாழ்க்கைத் தத்துவத்துடன் தெளிவாக வேறுபடுத்தக்கூடியதாக அமைந்து காணப்படுகின்றது.
கல்விக்கான நோக்கங்களை அவற்றின் அடிப்படை கருதி மூன்று வகையாகக் பிரிக்கலாம்.
1. தனியாள் நோக்கங்கள்
2. சமூகம் சார்ந்த நோக்கங்கள்
3. சமூக தனியாள் நோக்கங்கள்
தனியாளின் உள்ளார்ந்த சக்தியை வெளிக் கொணர்வதே கல்வி போன்ற கருத்துக்களை தனியாள் நோக்கங்களில் இடம் பெறுகின்றன. சமூக நன்மைக்காக தனியாள் நன்மை விட்டுக் கொடுக்கப்படுவதை சமூகம் சார்ந்த நோக்கங்கள் வலியுருத்துகின்றன. கல்வி நோக்கங்களில் தனியாள் சமூகம் என வகுத்து நோக்குவது தேவையற்றது. தனியாள் நலன்களும் சமூக நலன்களும் இணைந்ததாக கல்வி நோக்கங்கள் அமைய வேண்டும்.
கல்வியின் நோக்கங்களை
1. தேசிய நோக்கம்
2. பிரதேச நோக்கம்
3. பாடசாலைகளின் நோக்கம்
4. தனியாள் நோக்கம்
என நிலையின் அடிப்படையிலும் வகுத்து நோக்கலாம். எனெனில் கல்வியின் தேவை வெவ்வேறு நிலைகளில் வேறுபடுகின்றது. நாட்டுக்கு நாடு கல்வியின் நோக்கங்கள் வேறுபடுவது மட்டுமன்றி காலத்திற்குக் காலம் அவை மாறுபடுவதும் குறிப்பிடத்தக்கது. இலங்கையின் கல்வி நோக்கங்கள் ஒன்றாக தொகுக்கப்பட்டு காணப்படவில்லை ஆயினும் காலத்திற்கு காலம் வெளியிடப்பட்ட கல்வி எல்லை அறிக்கைகளிலும் சீர்திருத்த பிரேரணைகளிலும் கல்வியின் நோக்கங்களும் குறிக்கோள்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.
பின்வருவன அத்தகைய அறிக்கைகளுள் சிலவாகும்.
1. கன்னங்கரா அறிக்கை – 1943
2. கல்வி வெள்ளை அறிக்கை – 1964
3. பொதுக்கல்வி தொழினுட்பக்கல்வி சீர்திருத்த பிரேரணைகள் - 1966
4. கல்வி சீர்திருத்த பிரேரணைகள்- 1974
5. ;கல்வி சீர்திருத்த பிரேரணைகள் - 1981
6. தேசிய கல்வி ஆணைக்குழு அறிக்கை – 1992
இவை தவிர ஒவ்வொரு பாடவிதான உருவாக்கங்களின் போதும் கல்வியின் நோக்கங்களும் குறிக்கோள்களும் எடுத்துக்காட்டப்படுகின்றன. உதாரணமாக ஆரம்ப கல்வி பாடத்திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நோக்கங்களை எடுத்துக் கூறலாம். ஒவ்வொரு அறிக்கைகளும் தனித்தனியே நோக்கங்களை குறிப்பிடுகின்றன. இதனால் பொதுமைப்பாடு நிலவும் அதே வேளையில் அவற்றில் அமைந்துள்ள நோக்கங்கள் காலத்திற்கு ஏற்ப தனிச்சிறப்புக்களையும் தேவைகளையும் நிறைவேற்றும் அடிப்படைகளையும் கொண்டவைகளாக காணப்படுகின்றன.
கன்னங்கரா அறிக்கையில் கல்வி நோக்கங்கள் சிலவற்றினை கீழே காணலாம்.
1. வரையறைக்குட்பட்ட வளங்களைக் கொண்ட உலகில் வாழ்வதற்கு தேவையான அறிவு, மனப்பாங்கு, திறன் ஆகியவற்றை பெற்றுக்கொள்வதுடன் சுற்றாடல் பற்றிய உணர்வையும் பெறுதல்.
2. ஆரோக்கியமான பூரணத்துவமுடைய வாழ்க்கைக்கு தேவையான பழக்கவழக்கங்களை வளர்த்துக்கொள்ளல்.
3. சமூக வாழ்வு, சமூக சிந்தனை ஆகியவற்றிற்கு தேவையான பழக்கவழக்கங்கள், மொழித்திறன்கள், கருத்து வெளிப்பாட்டுத்திறன்களையும் வளர்த்தல்.
4. நமது நாட்டின் சமய, கலாச்சார, பாரம்பரியம் தொடர்பான பண்புகளை அறிந்து அவற்றை மதித்துப் பேணும் மனப்பாங்கு திறன்களைப் பெறல்.
5. சிறப்பான ஆக்க சக்தி, சமாதானமும் நிதியுமுடைய செயற்பாடுகளைக் கொண்ட பிரஜைக்குறிய பண்புகளை வளர்த்தல்.
6. பிறரின் சொத்துக்கள், கருத்துக்கள், வாழ்க்கைக் கோலங்கள் போன்றவற்றிற்கு மதிப்பளித்தல்.
7. மனித சமுதாயம் எதிர்நோக்கு பொதுப்பிரச்சினை அவை இந்நாட்டின் வாழ்க்கை முறையில் ஆதிக்கம் செலுத்தும் விதம் என்பவற்றை உணர்தல்.
இவை தேசிய கல்வி நோக்கங்களில் சிலவாக அமைந்த போதிலும் ஒரு பாடசாலை கொள்ள வேண்டிய கல்வி நோக்கங்களையும் இங்கு குறிப்பிடுவதன் மூலம் கல்வி நோக்கங்கள் தொடர்பாக ஒவ்வொரு நிலைகளிலும் உள்ள வேறுபாடுகளை உணரலாம்.
ஒரு பாடசாலைக்கு பொருந்தக்கூடிய கல்வி நோக்கங்கள் பின்வருமாறு
1. அறிவை பயன்படுத்த மாணவர்களிடையே திறமைகளை வளர்த்தல்.
2. மாணவர் மத்தியில் நல்ல ஆரோக்கியமான பழக்கவழக்கங்களை பயிற்றுவித்தல்.
3. தன்னடக்க கட்டுப்பாடுகளை வளர்த்துக்கொள்ள உதவுதல்.
4. நாட்டுப்பற்றை ஊட்டி வளர்த்தல்.
5. சமூதாயத்தால் விரும்பப்படும் விழுமியங்களையும் நற்பண்புகளையும் கடைப்பிடிக்க உதவுதல்.
6. குழு முயற்சி, சட்டதிட்டத்திற்கமைய ஒழுகும் பண்பு, ஆரோக்கியம், போட்டி மனப்பான்மை ஆகியவற்றை வளர்த்தல்.
7. தலைமைத்துவப் பண்புகள், சமூகங்களிடையே ஒற்றுமையை வளர்க்க உதவுதல்.
மேற்குறிப்பிட்ட நோக்கங்கள் இந்நாட்டின் எல்லா பாடசாலைகளினாலும் எடுத்துச்செல்லக் கூடியதாகும்.
ஆசிய நாடுகளில் கல்வி வளர்ச்சியில் ஜப்பானுக்கு அடுத்ததாக குறிப்பிடப்படும் இலங்கை நீண்ட காலக் கல்வி வரலாற்றினை கொண்டது. கடந்த காலங்களில் இலங்கையில் கல்வி செயற்பாடுகளில் புகுத்தப்பட்ட மாற்றங்கள் இலங்கையில் கல்வி நோக்கங்கள் குறிக்கோள்கள் என்பவற்றை தெளிவாகப் புலப்படுத்துவனவாகக் காணப்படுகின்றன. தாய்மொழிக் கல்வித்திட்டம், இலவசக் கல்வித் திட்டம், கலைத்திட்ட மாற்றங்கள், பாடசாலை அமைப்பு மாற்றங்கள், கல்வியில் அதிகாரப்பரவலாக்கள் போன்ற நடவடிக்கைகள் எமது நாட்டின் சீரிய குறிக்கோள்களையும் புலப்படுத்தும் அம்சங்களாக விளக்குகின்றன. அனைவருக்கும் கல்வி என்பது எமது நாட்டின் நோக்கங்களுள் ஒன்று. பிறப்பால் அனைவரும் சமன் ஆகையால் சகலருக்கும் கல்வி வழங்குவது எமது நாட்டின் கல்வி நோக்கமாக உள்ளது. எந்த வித பேதமும் இல்லாது நாட்டில் உள்ள சிறுவர்கள் அனைவருக்கும் கல்வியை வழங்குவது இலங்கையின் கல்வி நோக்கமாகும்.
சிறுவர்களுக்கு மட்டுமன்றி பாடசாலையை விட்டு சென்றோர்க்கும் வளர்ந்தவர்களுக்கும் கல்வியை அளிப்பது எமது நாட்டின் கல்வியின் இலக்காகும். ஆண், பெண் என்ற பால் வேறுபாடுகளின்றி இருபாலாருக்கும் கல்வி வழங்க எமது கல்வி அமைப்பு இடமளித்துள்ளது. கல்வி இலக்கின் இன்னொரு சிறப்பம்சம் என்ன வென்றால் ஊனமுற்றோர்கள், அங்ககுறைபாடுகளுக்குட்பட்டவர்கள் ஆகியோரின் கல்வி முன்னேற்றத்திற்கு வழியமைத்துக் கொடுத்துள்ளது. இவ்வாறு வலது குறைந்தவர்களுக்கான விசேட கல்வியை அளிப்பதன் மூலம் அனைவரையும் எதிர்கால உலகில் இயைபுற்று வாழ்பதற்கு தகுதியான கல்வியினை வழங்குதல் எமது நாட்டின் கல்வி நோக்கமாகவுள்ளது.
எதிர்காலத்திற்கு ஏற்றதாக எமது கல்வி இருப்பதற்கு விஞ்ஞானம், தொழினுட்பம், சமயம், தத்துவம், அறநெறி, கணினியற் கல்வி, மொழிக்கல்வி, பொருளியற்கல்வி என்பன வளர்க்கப்பட வேண்டும் என்பதும் ஒர் இலக்காகவுள்ளது. நாட்டின் தேவைகளை பூர்த்தி செய்யக்கூடியவாறு கலைத்திட்டத்தை மாற்றி அமைப்பதற்கு திட்டம் தயாரிக்கப்படுகின்றது. கல்வியானது வேலை உலகுடன் தொடர்பு கொண்டிருத்தல் வேண்டும் இத்தகைய தொடர்பு ஏற்படும் வகையில் பாடநெறி தயாரிக்கப்படுகின்றது. நாட்டிலுள்ள சகல மாணவர்களுக்கும் ஒரே விதமான பொது கல்வியை வளங்கும் முகமாக ஒருங்கிணைக்கப்பட்ட கலைத்திட்டம் ஏற்படுத்தப்பட்டு கலை, விஞ்ஞானம் என்ற வேறுபாடு இன்றி பொது கல்வியைப் பெற வாய்ப்பளிக்கப்பட்டமை. இக்கலைத்திட்டம் 1972ம் ஆண்டு புதிய பாதை என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டது.
மேற்குறிப்பிடப்பட்ட குறிக்கோள்களையும் நோக்கங்களையும் அடையும் நோக்குடன் முன்பாடசாலையை அமைக்கும் திட்டம், சிறிய பாடசாலைகளை அபிவிருத்தி செய்யும் திட்டம், பெருந்தோட்ட துறையை சேர்ந்த பாடசாலைகளை விருத்தி செய்யும் திட்டம், இலவச பாடநூல் வினியோகத்திட்டம், மதிய உணவுத்திட்டம், விருத்தியாக்கப்பட்ட முறையிலான புலமைப்பரிசில் திட்டம், கல்விக்கல்லூரிகள் திட்டம், தேசிய கல்வி நிறுவன ஸ்தாபிப்பு என்பன சிறப்பான முறையில் நடைமுறைப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. எனவே நாமும் இத்தகைய குறிக்கோள்களையும் நோக்கங்களையும் நிறைவேற்றும் வகையில் கல்வியை கற்போம்.
வினோத் விதுர்சனா
கல்வியியல் மற்றும் பிள்ளைநலத்துறை
இரண்டாம் வருடம் சிறப்புக்கற்கை
கிழக்குப்பல்கலைக்கழகம் - வந்தாறுமூலை







.jpeg)





.jpeg)