இலங்கையில் முன்பிள்ளைப் பருவக் கல்வியை முறைமைப்படுத்தல் .

(சித்தா)


1.0 அறிமுகம் 

முன்பிள்ளைப் பருவக் கல்வியின் அவசியம் பற்றிய விழிப்புணர்வு சர்வதேச ரீதியாக ஏற்பட்டு ஒரு நூற்றாண்டுக்கு அதிகமான காலம் கடந்து விட்டது. இந்த விழிப்புணர்வு சமூகத்தில் ஏற்பட சமூகவியலாளர்கள், தத்துவியலாளர்கள், உளவியலாளர்கள், கல்வியலாளர்களின் பங்களிப்பு கணிசமானது. ஒரு நூற்றாண்டுக்கு முற்பட்ட காலத்திலிருந்தே உலகலாவிய ரீதியில் முன்பள்ளிக்கு மிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகின்றது. ஆயினும் இலங்கையில் முன்பிள்ளைப்பருவக் கல்வி பற்றிய முக்கியத்துவம் சில தசாப்தங்களுக்குள்ளேயே உணரப்பட்டுள்ளது. அந்தவகையில் 1943 ஆம் ஆண்டு வெளியாகிய கன்னங்கரா அறிக்கையில் முன்பள்ளிகள் அமைக்கப்பட வேண்டுமென்ற சிபாரிசு உள்ளடக்கப்பட்டுள்ளமை. 1961 ஆம் ஆண்டு வெளியாகிய ஜயசூரிய ஆணைக்குழுவின் அறிக்கையில் முன்பள்ளிகளுக்கான வசதிகள் அளிக்கப்படல் வேண்டுமெனக் குறிப்பிடப்பட்டுள்ளமை என்பவற்றைக் குறிப்பிட முடியும். ஆயினும் இலங்கையில் முன்பள்ளிகள் கல்வி அமைச்சுக்குக்கு கீழே உள்ளடக்கப்படாததுடன் முன்பள்ளிக்கல்வி தொடர்பான முறைமைப்படுத்தல்கள் உரிய முறையில் வகுக்கப்படாமையும் முன்பள்ளிக்கல்வி தொடர்பான பல்வேறு போதாமைகளுக்கு காரணமாகும். மேலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட சட்டங்கள், விதிகள், ஆசிரியர்களின் கல்வித் தகுதி, வாண்மைத் தகுதி, வகுப்பறையின் இடவசதி போன்றன எவற்றையும் கவனத்தில கொள்ளாமலே முன்பள்ளிகளை எவரும் ஆரம்பிக்கலாமென்ற முறைமைப்படுத்தப் படாத நிலையே இன்னமும் இலங்கையில் காணப்படுகின்றது. இப்படி முறைமைப்படுத்தாத் முன்பள்ளிக் கல்வி அளிக்கப்படுவதால் இளம் பிள்ளைகளிடத்தே பலவித பாதிப்புக்கள் ஏற்படுகின்றமையை ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இந்தப் பின்புலத்தில்; இக்கட்டுரையானது இலங்கையின் முன்பள்ளிக் கல்வியை முறைமைப்படுத்தலில உள்ள சவால்களைப் பற்றி ஆராய முயல்கின்றது. 

2.0 முன்பள்ளிக் கல்வியின் முக்கியத்துவம் 

2.1 பிள்ளையின் முதல் ஐந்து வருடங்களும் பிள்ளையும். 

மனிதனின் வாழ்வில் அவனது முதல் ஐந்து வருடங்கள் விருத்தி தொடர்பாக மிக முக்கியமான காலகட்டமாகக் கருதப்படுகின்றது. இக்காலப்பகுதியில் அவனின் மூளையானது வாழ்நாளின் வேறெந்தக் காலகட்டத்தினை விடவும் மிக விரைவாக விருத்தியடைகின்றது. பிள்ளைகள் இக்காலகட்டத்தில் தமது வாழ்நாளில் அடைய வேண்டிய பல விருத்திசார்மைல்கற்களை அடைகின்றனர். தவளுதல், நடத்தல் பேசுதல், ஏறுதல், தெளிவாகப் பேசுதல் போன்ற பிள்ளைகள் அடைய வேண்டிய முக்கியமான விருத்திசார் அம்சங்களை இந்த மைல்கற்கள் குறிக்கின்றன. இவையே விருத்திசார் ஆட்சிபுலங்கள் ( Domain ) எனப்படுகின்றன. இந்த ஆட்சிகளை பல்வேறு படிமுறைகளாக்க முடியும். 

2.1 பூரண விருத்தி விருத்தி 

விருத்தி ஆட்சிகள் என்பது பிள்ளையின் விருத்தி மற்றும் வளர்ச்சி தொடர்பான முன்னேற்றத்தின் குறிப்பிடத்தக்க பகுதிகளாகும். ஒவ்வொரு பிள்ளையும் தனது சொந்த வேகத்தில் விருத்தியடைகின்றது. பிள்ளையின் விருத்தியில் வயது, பரம்பரை, சூழல் போன்றன செல்வாக்குச் செலுத்துகின்றன. பிள்ளையின் விருத்தியில் பின்வரும் நான்கு ஆட்சிகள் (விருத்திப்பரப்புக்கள் அல்லது விருத்திப்பரிமாணங்கள்) பங்காற்றுகின்றன. 

1. உடல்சார் ஆட்சி 

2. அறிகைப்புல ஆட்சி 

3. மொழி ஆட்சி 

4. சமூக மனவெழுச்சிசார் ஆட்சி 

2.1.1 உடல்சார் ஆட்சி 

நிறை மற்றும் உயரம் அதிகரித்தல் தசைநார்கள் வலிமையடைதல் போன்றன உடல்சார் ஆட்சியில் உள்ளடக்கப்பட்டுள்ளன. இது நடத்தல், தவளுதல், உணவை விரல்களால் எடுத்தல் என்பதுடன் சம்பந்தப்படுகின்றது. இயக்கத்திறன் விருத்தி, ஐம்புலன்களின் விருத்தி, பேரியக்கத்திறன் விருத்தி, நுண்ண்pயக்கத்திறன் விருத்தி என்பவற்றையும் இது உள்ளடக்கியதாகும். முழங்கை, கால்கள், உடல் அசைவு போன்றவற்றின் தசைநார்களின் அசைவுகள் பேரியக்கத்திறன்களில் உள்ளடங்கியுள்ளன. மேலும் இது முழுமையான உடல் அசைவு, நடத்தல், ஓடுதல், பாய்தல், சமநிலையில் இருத்தல், தூக்குதல் போன்ற உடல்சார் செயற்பாடுகள் பேரியக்கத்திறன்களுடன் தொடர்புபட்டுள்ளன. மார்பு, விரல் என்பவற்றில் உள்ள சிறிய தசைநார்களுடன் நுண்ணியக்கத் திறன்கள் தொடர்புபட்டுள்ளன. 

2.1.2 அறிகைசார் ஆட்சி 

அறிகைப்புல விருத்தியானது பிள்ளையின் சிந்தித்தல் முறை, பிரசினம் தீர்க்கும் ஆற்றல், அறிவைப் பெறுதல் என்பவற்றுடன் தொடர்புபடுகின்றது. அறிகைப்புல விருத்தியானது பிள்ளையின் மூளை விருத்தி, உலகைப் புரிந்து கொள்ளும் ஆற்றல், கற்கும் திறன் என்பவற்றுடன் தொடர்புபடுகின்றது. பிள்ளைகளிடம் அறிகைப்புலத் திறன்கள் அதிகரிக்கும்போது செயலொழுங்கு, கவனத்தை செலுத்தும் ஆற்றல், ஞாபகப்படுத்தும் ஆற்றல், சுற்றாடலைப் பற்றிய விளக்கம், ஆக்கத்திறன் வெளிப்பாடு, திட்டங்களை உருவாக்கி விருத்தி செய்தல் என்பன விருத்தியடைகின்றன 

2.1.3 மொழி ஆட்சி 

மொழி அல்லது தொடர்பாடல் ஆட்சியானது பிள்ளை விளக்கத்துடன் மற்றவர்களுடன் தொடர்பாடலில் ஈடுபடும் ஆற்றல், வாய்மொழி மூலம் தன்னை வெளிப்படுத்தல் என்பவற்றுடன் தொடர்புபடுகின்றது. பிள்ளைகளிடத்தே மொழி விருத்தியானது பச்சிளம் பாலர் பருவத்திலிருந்து ஆரம்பிக்கின்றது. ஒலியெழுப்புதல், மழலைச் சொல் பேசுதல் என்பவற்றிலிருந்து ஆரம்பித்து பின்னர் பூரண வாக்கியத்தைப் பேசுதல் என வயது அதிகரிக்கும்போது மொழித்திறன் விருத்தியடைகின்றது. மொழித்திறன் விருத்தியானது முன்வாசிப்புத்திறன், முன் எழுத்து திறன் என்பவற்றுக்கும் அடிப்படையாக அமைகின்றது. 

2.1.4 சமூகமனவெழுச்சிசார் ஆட்சி 

சமூக உணர்வு ஆட்சியானது பிள்ளைகள் எவ்வாறு மற்றவர்களுடன் இடைத்தொடர்பு கொள்கின்றனர், தமது சொந்த உணர்வுகளை எவ்வாறு வெளிப்படுத்துகின்றனர், எவ்வாறு தமது உணர்வுகளை கட்டுப்படுத்துகின்றனர் என்பவற்றுடன் தொடர்புபடுகின்றது. 

மேலே குறிப்பிடப்பட்ட ஆட்சிகள் அனைத்தும் முன்பிள்ளைப்பருவத்திலேயே மிக வேகமாக விருத்தியடைகின்றன. எனவே முன்பள்ளிப் பருவத்தில் பிள்ளைகள் செல்கின்ற இடமாகிய முன்பள்ளிகளை முறைமைப்படுத்துவது அவர்களது பூரணவிருத்திக்கு மிக அவசியமானதாகும். 

2.2 முன்பள்ளிக் கல்வியில் மேற்கொள்ளப்படும் முதலீடானது உயர் திரும்பல் வீதங்களை (high rate of return) கொணர்தல் 

பேராசிரியர் ஜேம்ஸ் ஹக்மென் என்பவரால் பெரி (Perry) முன்பள்ளி வேலைத்திட்டத்தின்கீழ் ஐக்கிய அமெரிக்காவில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் பிள்ளைகளுக்கான சிக்காக்கோ பிள்ளை -  பெற்றோர் நிலையத்தில் நடத்தப்பட்ட ஆய்வுக்கற்கையானது பங்குபற்றுனர்களின் உயர் அடைவுச் சோதனைப் புள்ளிகள், ஒரே வகுப்பில் மீளத் தங்கியிருத்தலில் குறைவடைதல், விசேட கல்விக்காக செலவழிக்கும் காலம் குறைவடைதல், குறைந்தளவு சட்ட விரோத காரியங்களும், குற்றங்களும் உயர் பாடசாலையை பூர்த்தி செய்தலில்; அதிகரிப்பு, என்பனவற்றை சிறந்த முன்பள்ளிக் கல்வியின் அனுகூலங்களாக இனங்கண்டது. பெரி முன்பள்ளி பங்குபற்றுநர்கள் தொழில் வாய்ப்பிற்கும் மேலதிக கற்றலுக்கும்; கூடுதலான சந்தர்ப்பங்களைப் பெற்றுக்கொண்டதுடன் நலன்புரி சேவைகளில் குறைவாக தங்கியிருந்தமையும் கண்டறியப்பட்டது. எனவே இவரின் ஆய்வுமுடிவுகள் தரமான முன்பள்ளிக் கல்வி வழங்கப்பட்டால் அதற்கு ஏற்படும் செலவானது உயர்ந்த வீதத்தில் மீளத் திரும்பும் என்பதை எடுத்துக்காட்டியுள்ளன. 

2.3 முன்பள்ளிக் கல்வி பிள்ளைகளை ஆரம்பப் பாடசாலைக்கு செல்வதற்குத் தயார்ப்படுத்துகின்றது. 

முன்பள்ளிக் கல்வியானது பிள்ளைகளை ஆரம்பப் பாடசாலைகளுக்குச் செல்வதற்கு தயார் செய்கின்றது. முன்பள்ளியில் அவர்கள் பயிலும் விடயங்கள் ஆரம்பக் கல்வியை சீராகப் பயில்வதற்கு துணை செய்கின்றன. 

3.0 முன்பிள்ளைப்பருவக் கல்வியை முறைமைப்படுத்த வேண்டியதன் அவசியம்

இலங்கையில் பிள்ளைப்பருவக் கல்வியானது முறைமைப்படுத்தப்படாது காணப்படுகின்றது. பெரும்பாலான முன்பள்ளிகளில் அவற்றுக்குத் தேவையான அடிப்படையான வசதிகளான கற்றல்-கற்பித்தல் மண்டபம், வெளிப்புற விளையாட்டு இடம், விளையாட்டு உபகரணங்கள், அசிரியர்களுக்கான அறைகள், சாதனங்கள், சிறுவர்களுக்கான கழிப்பறைகள், சிறுவர்களைப் பற்றிய பதிவுகள் போன்றன காணப்படுவதில்லை. மேலும் பிள்ளைகளின் சுகாதாரம் தொடர்பாகக் கண்காணிக்கும் சுகாதார அதிகாரிகள் இந்த முன்பள்ளிகளுக்கு கிரமமாகச் செல்வதில்லை. இம் முன்பள்ளிகளில் கற்பிக்கும்  ஆசிரியர்கள் முறைப்படியான கல்வித் தராதரங்களையோ, வாண்மை விருத்தி தராதரங்களையோ கொண்டிருப்பதில்லை. இதனை விட பிள்ளைகளுக்கு கற்பிக்க வேண்டிய விடயங்கள் உள்ளடங்கிய கலைத்திட்டம் பெரும்பாலான முன்பள்ளி ஆசிரியர்களுக்கு தெரியாது. இந்த ஆசிரியர்கள் தான்தோன்றித்தனமாக தமக்குத் தெரிந்த விடயங்களைக் கற்பிக்கின்றனர். எனவே முன்பிள்ளைப் பருவக் கல்வியை முறைமைப்படுத்த வேண்டியது அவசியமானதாகும். 

4.0 முன்பிள்ளைப்பருவக் கல்வியை முறைமைப்படுத்தும் போது கவனத்தில் கொள்ள வேண்டியன.

முன்பிள்ளைப்பருவக் கல்வியை முறைமைப்படுத்தும் போது பல்வேறு விடயங்களை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியமானதாகும். எனினும் பின்வரும் ஐந்து விடயங்களையும் முறைமைப்படுத்துதல் முக்கியமானதாகும். 

அ. கல்வி நியமங்களை உருவாக்குதல் 

கல்வி நியமங்கள் மிக என்பது பிள்ளைகள் எவ்வாறு விருத்தியடைகின்றனர், கற்கின்றனர் என்பவற்றின் கோட்பாடுகளை உள்ளடக்கியது. இது முன்பள்ளிப் பிள்ளைகள் அறிந்திருக்கக் கூடியவற்றையும், செய்யக் கூடியவற்றையும் வரையறுத்துக் கூறும் ஆவணமாகும். எனவே இந்த நியமங்களைப் பற்றி அறிந்து அவற்றிக்கு ஏற்றவாறு முன்பள்ளி ஆசிரியர்கள் கற்பிக்க வேண்டியது அவசியமானதாகும். 

ஆ. கலைத்திட்ட சட்டகங்களை உருவாக்குதல் 

இலங்கையில் ஆரம்பக் கல்வி தொடக்கம் உயர் தர வகுப்பு வரை பாடசாலைகளில் பொதுவான கலைத்திட்டம் காணப்படுகின்றது. ஆனால் முன்பள்ளிகளுக்கான பொதுவான கலைத்திட்டம் காணப்படவில்லை. வௌ;வேறு முன்பள்ளிகளில் வித்தியாசமான கலைத்திட்டங்களில் கற்கும் மாணவர்கள் தரம் ஒன்றில் ஆரம்பப் பாடசாலைகளில் பொதுவான கலைத்திட்டத்தில் பயில வேண்டியுள்ளது. இது ஆரம்பப பாடசாலைப்; பிள்ளைகளின் கற்றலில் ஏற்றத் தாழ்வுகளை ஏற்படுத்துவதாக இலங்கையில் பலரும் சுட்டிக் காட்டியுள்ளனர். இது பாரிய குறைபாடாகும் இத்தகைய சமமின்மைகளை நீக்கும் வகையில் முன்பள்ளிகளுக்கான பொதுவான கலைத்திட்டம் உருவாக்கப்படுவது காலத்தின் தேவையாகும்.

இ. ஆசிரியர் தராதரங்களை நிர்ணயித்தல் 

இலங்கையில் முன்பள்ளிகளில் கற்பிப்பவர்களுக்கான கல்வித் தகுதியோ, வாண்மை விருத்தித் தகுதியோ வரையறுக்கப்படாதுள்ளது. கல்விப் பொது தராதரப் பத்திரப் பரீட்சையில் மொழி, கணிதம் போன்ற பாடங்களில்; சித்தியடையாதவர்களும் முன்பள்ளிகளில் ஆசிரியர்களாகப் பணியாற்றுவது அவதானிக்கப்பட்டுள்ளது. இப்படியானவர்களால் மொழி, கணிதம் போன்ற பாடங்களை முன்பள்ளி மாணவர்களுக்கு சிறப்பாகக் கற்பிக்க முடியுமெனக் கூற முடியாது. மேலும் முன்பள்ளிகளில் பணியாற்றுவதற்குரிய வாண்மை விருத்தி கற்கைகளை பூர்த்தி செய்யாத பலரும் முன்பள்ளிகளில் ஆசிரியர்களாகப் பணியாற்றுகின்றனர். பிள்ளைகளைப் பற்றிக் கற்கும் கற்கைகளான பிள்ளை உளவியல் போன்றவற்றை கற்காத ஆசிரியர்களால் முன்பள்ளிகளில் வினைத்திறனுடன் கற்பிக்க முடியாது. எனவே முன்பள்ளிகளில் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான தராதங்களை நிர்ணயிப்பதற்கு பொறுப்பு வாய்ந்த அதிகாரமுள்ள நிறுவனங்கள் முன்வர வேண்டியது அவசியமானதாகும்.

ஈ. ஆசிரியர் மாணவர் விகிதங்களை நிர்ணயித்தல்

இலங்கையில் முன்பள்ளி ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையிலான விகிதங்கள் நிர்ணயிக்கப்படவில்லை. சில முன்பள்ளிகளில் ஒரு ஆசிரியருக்கு நாற்பதிற்கு மேற்பட்ட மாணவர்கள் இருப்பது அவதானிக்கப்பட்டுள்ளது. முன்பள்ளிப் பிள்ளைகளுக்குப் பல்வேறு செயற்பாடுகளை வழங்கி அவர்களை நன்கு அவதானித்துக் கற்பிக்க வேண்டியது அவசியமானதாகும். இதற்கு ஆசிரியர் மாணவர் விகிதம் குறைவாக இருக்கவேண்டியது அவசியம். எட்டுக்கு மேற்படாத பிள்ளைகளுக்கு ஒரு ஆசிரியர் கற்பிக்கும் நடைமுறை பல்வேறு நாடுகளில் காணப்படுகின்றது. எனவே இலங்கையிலும் ஆசிரியர் மாணவர் விகிதங்களை வரையறுக்கவேண்டியது அவசியமானதாகும்.

உ. பிள்ளையின் கற்றல் விருத்தி என்பவற்றை கணிப்பீடு செய்வதற்குரிய முறைகளை உருவாக்குதல்.

பிள்ளையின் கற்றலை கருத்துள்ளதாக அனங்காணும் முறையே கணிப்பீடென இலங்கை தேசிய கல்வி நிறுவகம் வரையறுத்துள்ளது. பிள்ளைகளின் கற்றல் விருத்தி என்பவற்றை கணிப்பீடு செய்வதற்கான முறைகள் இலங்கையில் காணப்படவில்லை. எனவே இலங்கையிலுள்ள முன்பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கற்றலையும் விருத்தியையும் கணிப்பீடு செய்வதற்குரிய பொருத்தமான முறைகளை உருவாக்க வேண்டியது அவசியமானதாகும். 

நிறைவுரை 

மனித வாழ்வில் அவனது பிள்ளைப் பருவம் மிக முக்கியத்துவம்; வாய்ந்ததொன்றாகக் கருதப்படுகின்றது. இந்தப் பருவத்திலேயே அவனது முக்கிய விருத்திகள் மேம்படுகின்றன. எனவே இதன் முக்கியத்துவத்தினை உணர்ந்து அனைவரும் இதில் கவனம் செலுத்தி பிள்ளைகளின் விருத்தி தொடர்பான செயற்பாடுகளுக்குத் துணை புரிவது மிகவும் அவசியமானதாகும்.

பேராசிரியர் தேவராசா முகுந்தன்

நன்றி: பார்வை, கல்விப் பீடம், இலங்கை திறந்த பல்கலைக் கழகம்