இலங்கை வருவதற்கான விமான பயணச்சீட்டுக்களை முன்பதிவு செய்து பின்னர் இரத்து செய்துள்ள பஷில் ; பிரதி சொலிசிட்டர் ஜெனரல் மாத்தறை நீதிவான் நீதிமன்றத்தில் அறிவிப்பு



முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ விமானப் பயணத்திற்குத் தகுதியற்றவர் எனக் கூறும் மருத்துவ அறிக்கைகளைச் சமர்ப்பித்த போதிலும், இலங்கை வருவதற்கான விமான பயணச்சீட்டுக்களை முன்பதிவு செய்து பின்னர் இரத்து செய்துள்ளதாக மாத்தறை நீதிவான் நீதிமன்றத்திற்கு வெள்ளிக்கிழமை (21) அறிவிக்கப்பட்டுள்ளது.

பஷில் ராஜபக்ஷ வேண்டுமென்றே நீதிமன்றத்தில் ஆஜராவதைத் தவிர்க்கிறார் என்ற பலத்த சந்தேகம் இருப்பதாக பிரதி சொலிசிட்டர் ஜெனரல் லக்மினி கிரிஹாகம நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

அவர் சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட மருத்துவ ஆவணங்களில் உள்ள முரண்பாடுகளையும் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் லக்மினி கிரிஹாகம சுட்டிக்காட்டியுள்ளார். மாத்தறையிலுள்ள பிரவுன் ஹில்லில் ஒன்றரை ஏக்கர் நிலத்தை வாங்குவதற்கு சட்டவிரோதமான வழிகளில் பெறப்பட்ட 50 மில்லியன் ரூபா பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்கு விசாரணையின் போதே பிரதி சொலிசிட்டர் ஜெனரல் லக்மினி கிரிஹாகம இவ்விடயங்களை தெரிவித்துள்ளார்.

பஷில் ராஜபக்ஷ உட்பட நான்கு பேர் இந்த விடயம் தொடர்பாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். முதல் மற்றும் இரண்டாவது சந்தேக நபர்கள் நீதிமன்றத்தில் ஆஜரான போதிலும், பசில் ராஜபக்ச மற்றும் நான்காவது சந்தேக நபரான அயோமா கலப்பத்தி ஆகியோர் ஆஜராகவில்லை.

பஷில் ராஜபக்ஷ சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி அனில் சில்வா, தனது கட்சிக்காரர் 'இடது பக்க சியாட்டிகா' நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் விமானப் பயணத்திற்குத் தகுதியற்றவர் என்றும் கூறும் மருத்துவ அறிக்கைகளைச் சமர்ப்பித்துள்ளார்.

எனினும், பிரதி சொலிசிட்டர் ஜெனரல், முன்னர் சமர்ப்பிக்கப்பட்ட மருத்துவ அறிக்கைகள், விழுந்ததால் ஏற்பட்ட கழுத்து காயம் பற்றிக் குறிப்பிட்டிருந்தன என்றும், ஆனால் எக்ஸ்ரே அறிக்கைகளில் எலும்பு முறிவுகள் எதுவும் இல்லை என்றும் சுட்டிக்காட்டினார்.

பஷில் ராஜபக்ஷ ஆறு மாதங்களுக்கு விமானப் பயணத்தைத் தவிர்க்க வேண்டும் என்று கடந்த செப்டம்பர் 14 அன்று வழங்கப்பட்ட மருத்துவப் பரிந்துரையை மீறி, அவர் நவம்பர் 18 முதல் 21 வரை பயணம் செய்ய விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து பின்னர் இரத்து செய்துள்ளார் என்பதையும் அவர் மன்றில் வெளிப்படுத்தியுள்ளார்.

பசில் ராஜபக்ச உதவியுடன் பயணிக்கக்கூடியவர் என்றும், சிறப்பு இருக்கை அல்லது ஒட்சிசன் ஆதரவு தேவையில்லை என்றும் விமான நிறுவனத்தின் மருத்துவ அனுமதிப் படிவம் குறிப்பிட்டிருந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இது மருத்துவக் கோரிக்கைகளின் நம்பகத்தன்மை குறித்து மேலும் கேள்விகளை எழுப்புவதாகவும் இதன் போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பஷில் ராஜபக்ஷவின் சட்டக் குழுவை ஒரு விரிவான மருத்துவ அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறு நீதவான் உத்தரவிட்டதுடன், இணங்கத் தவறினால் பிணையை இரத்து செய்வது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.

சந்தேக நபர் நீதிமன்றத்தில் ஆஜராவதை உறுதி செய்யுமாறு பிணைதாரர்களுக்கும் உத்தரவிடப்பட்டது. இவ்வழக்கு 2026 மே 22 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது