எமக்கு கெப் ரக வாகனம் வேண்டாம் - நாமல் ராஜபக்ஷ



பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கெப் ரக வாகனங்களை கொள்வனவு செய்வதற்கு இருக்கும் அக்கறை மருந்துக் கொள்வனவில் இருக்க வேண்டும். எமக்கு கெப் ரக வாகனம் வேண்டாம். அந்த வாகனங்களை வைத்தியர்கள் மற்றும் சுகாதார சேவையாளர்களுக்கு வழங்குங்கள் என்பதை குறிப்பிட்டுக் கொள்கிறேன் என்று ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற 2026 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தில் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சுக்கான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் சுகாதார சேவையில் மனித வளத்துக்கான மானி யங்கள் குறைக்கப்பட்டது. 2026 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத்திட்டத்திலும் அவ்வறான தன்மையே காணப்படுகிறது. நியாயமான கோரிக்கைகளை முன்வைத்தே சுகாதார துறையினர் போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள்.

அவர்களின் கோரிக்கையை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும். வைத்தியர்களுக்கு வாகன கொடுப்பனவு வழங்குவதில் என்ன பிரச்சினை உள்ளது. தேசிய மட்டத்தில் எழுந்த பிரச்சினைகளின் போது வைத்தியர்கள் மற்றும் சுகாதார சேவையாளர்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட்டுள்ளார்கள். ஆகவே அவர்களை பாதுகாக்க வேண்டும்.

பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் நாட்டை விட்டு வெளியேறிய வைத்தியர்கள் நாட்டுக்கு மீண்டும் வருகைத் தரவுள்ளார்கள் என்று அரசாங்கம் குறிப்பிடுகிறது. அவ்வாறு இவர்கள் வருவதற்குரிய சாதகமான சூழல் என்ன ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.

பெரும்பாலான வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறும் மனநிலையில் தான் உள்ளார்கள். பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கெப் ரக வாகனங்களை கொள்வனவு செய்வதற்கு இருக்கும் அக்கறை மருந்துக் கொள்வனவில் இருக்க வேண்டும். எமக்கு கெப் ரக வாகனம் வேண்டாம். அந்த வாகனங்களை வைத்தியர்கள் மற்றும் சுகாதார சேவையாளர்களுக்கு வழங்குங்கள் என்பதை குறிப்பிட்டுக் கொள்கிறேன்.

ஜனாதிபதி அநுரகுமரார திஸாநாயக்க தேர்தல் காலத்தில் வைத்தியர்களை பாதுகாப்பதாகவும், சுகாதார துறை மீதான வெற் வரியை இரத்துச் செய்வதாகவும் குறிப்பிட்டார். ஆனால் இந்த வாக்குறுதிகள் ஏதும் நிறைவேற்றப்படவில்லை. மாறாக ஆளும் தரப்பின் உறுப்பினர்களின் நலன் குறித்து மாத்திரமே கவனம் செலுத்தப்பட்டுள்ளது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.