
யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்கு நோயை கட்டுப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் செவ்வாய்க்கிழமை (19)மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இக்கலந்துரையாடலில் தலைமையுரை ஆற்றிய மாவட்ட செயலர்,
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 2026ஆம் ஆண்டு மே மாதம் வரை டெங்கு நோயால் 497 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த இரு வருடங்களிலும் யாழ்ப்பாணத்தில் டெங்கு நோய் உயிரிழப்புகள் பதிவாகவில்லை. அதற்கு முந்திய வருடங்களிலும் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை குறைவாகவே காணப்பட்டது.
இனிவரும் காலங்களில் நோய்த் தாக்கம் அதிகரிக்காத வகையில் அதனை தடுப்பதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
தற்போது நாட்டில் பல பகுதிகளில் மழை பெய்து வருவதால் ஏற்படக்கூடிய டெங்கு நோய் பரவல் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும்.
பொது மக்களுக்கான போதிய விழிப்புணர்வின் அவசியத்தினையும் எடுத்துக் கூறி அனைவரும் ஒருங்கிணைந்த வகையில் செயற்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து டெங்கு விழிப்புணர்வு வாரத்தினை எதிர்வரும் 25ஆம் திகதி தொடக்கம் 27ஆம் திகதி வரை கடைபிடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 25ஆம் திகதி பொதுமக்கள் சிரமதானத்தில் ஈடுபடுவது, 26ஆம் திகதி அரசாங்க அலுவலகங்கள், பாடசாலைகளிலும் 27ஆம் திகதி தனியார் வர்த்தக நிலையங்களிலும் கள ஆய்வுகள் மற்றும் சிரமதானம் மேற்கொள்வது என இதன்போது தீர்மானிக்கப்பட்டது.
டெங்கு தாக்கம் அதிகமாக காணப்படும் கரவெட்டி, யாழ்ப்பாணம், பருத்துத்துறை, கோப்பாய், சங்கானை, சாவகச்சேரி, நல்லூர், சண்டிலிப்பாய் மற்றும் உடுவில் ஆகிய பிரதேச செயலகங்களில் டெங்கு வாரத்துக்குப் பின்னர் ஜூன் மாதம் 8ஆம் திகதியும் இதே செயற்பாட்டை மீண்டும் பின்பற்றுமாறு மாவட்ட செயலரால் தெரிவிக்கப்பட்டது.










.jpeg)

