சீரற்ற காலநிலை : 5500 பேர் பாதிப்பு ; கேகாலையில் 336.5 மி.மீ. மழைவீழ்ச்சி ; 6 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு...

நாட்டில் கடந்த சில தினங்களாக நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 14 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இரத்தினபுரி, காலி, அம்பாந்தோட்டை, மொனராகலை, மட்டக்களப்பு, திருகோணமலை, களுத்துறை, கொழும்பு, கம்பஹா, புத்தளம், அநுராதபுரம், யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களில் 1651 குடும்பங்களைச் சேர்ந்த 5500 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இம்மாவட்டங்களில் 6 குடியிருப்புக்கள் முழுமையாகவும், 234 குடியிருப்புக்கள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.

காலநிலை

தென்மேற்கு பருவக்காற்று படிப்படியாக நிலைபெற்று வருவதால், மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மேல் மற்றும் சபரகமுவ மாகாணங்களின் சில இடங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும். நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில் கேகாலை - பம்பேகம பிரதேசத்தில் 336.5 மி.மீ. மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடல் அலைகள் மேலெழக்கூடும்

மன்னாரிலிருந்து புத்தளம், கொழும்பு, காலி மற்றும் அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் கடல் அலைகள் 2.0 மீற்றர் முதல் 3.0 மீற்றர் உயரம் வரை மேலெழும்பக் கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன. இதனால் நாட்டைச் சூழவுள்ள ஆழம் கூடிய மற்றும் ஆழம் குறைந்த கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அதிகரித்துக்காணப்படுவதுடன் கடல் கொந்தளிப்பாகவும் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள், கடலில் பயணம் செய்வோர் மற்றும் மீனவர்கள் இது தொடர்பாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மற்றும் வளிமண்டலவியல் திணைக்களம் என்பவற்றால் வழங்கப்படும் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

மண்சரிவு எச்சரிக்கை

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கேகாலை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது. கேகாலையில் தெரணியகல, ருவன்வெல்ல மற்றும் தெஹியோவிட்ட பிரதேச செயலகப்பிரிவுகளுக்கும், இரத்தினபுரியில் இரத்தினபுரி, அயாகம, குருவிட்ட மற்றும் எஹெலியகொட பிரதேச செயலகப்பிரிவுகளுக்கும் மண்சரிவு தொடர்பில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்தனகலு ஓயாவை அண்மித்த மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை
கடும் மழையுடனான காலநிலை காரணமாக, அத்தனகலு ஓயாவை அண்மித்துள்ள தாழ்நிலப் பகுதிகளில் சிறிய அளவிலான வெள்ள நிலைமை ஏற்படக்கூடும் என நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. பலத்த மழை காரணமாகப் பல நதிப் படுகைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதாக அத்திணைக்களத்தின் நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவப் பணிப்பாளர், பொறியியலாளர் எல்.எஸ். சூரியபண்டார தெரிவித்துள்ளார்.

துனமலே நீர்மானி நிலையத்தின் தரவுகளின்படி, ஏற்கனவே 200 மி.மீ க்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதுடன், அத்தனகலு ஓயாவின் மேல் நீர்ப்பிடிப்புப் பகுதியின் சில இடங்களில் 250 மி.மீ க்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். இதன் காரணமாக கம்பஹா, கட்டான மற்றும் வத்தளை போன்ற தாழ்நிலப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

போக்குவரத்து பாதிப்பு

பெய்து வரும் பலத்த மழை காரணமாகப் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால், கொழும்பு - அவிசாவளை வீதியில் நேற்று போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருந்தது. களனி கங்கை பள்ளத்தாக்கின் சில பகுதிகளில் பதிவான அதிக மழைவீழ்ச்சி காரணமாக, அவிசாவளையிலிருந்து ஹங்வெல்ல வரையான சில பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளமையால் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, கொழும்பு - அவிசாவளை பிரதான வீதி புவக்பிட்டிய தும்மோதரை சந்தி, சீதாவக்க தாவரவியல் பூங்கா, அத்துடன் யட்டியாந்தோட்டை ஆகிய சில இடங்களில் வெள்ளத்தில் மூழ்கியிருந்தது. வெள்ளப் பெருக்கு காரணமாக உடுபிட்டிய பகுதியில் தெல்கொட - பெலும்மஹர வீதியிலான வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்தது.

கம்பஹா மிரிஸ்வத்தை வீதியும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் வாகனப் போக்குவரத்துக்குத் தடைபட்டிருந்தது. மேலும், உல்லாலபிட்டிய பகுதியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாகத் திவுலபிட்டிய - மீரிகம வீதியில் சிறிய ரக வாகனங்களின் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.