அம்பாறையில் தப்பியோட முயன்ற சந்தேகநபர் மீது பொலிஸார் துப்பாக்கிச்சூடு!


 அம்பாறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில், சட்டவிரோத மதுபான வியாபாரத்தில் ஈடுபட்ட சந்தேகநபர் ஒருவரைக் கைது செய்ய முயன்ற போது துப்பாக்கிச்சூட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் நேற்று ஞாயிற்றுக்கிழமை (17) இரவு மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது, சந்தேகநபர் அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்து, அவர்கள் மீது தாக்குதல் நடத்த முயற்சித்துள்ளார். எனினும், அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபர் சிறு காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த சந்தேகநபர் அங்கிருந்து தப்பியோடியுள்ளார். இதன்போது, வீதி பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் சந்தேகநபரை மீண்டும் கைது செய்ய முயற்சித்துள்ளார்.

இதன்போது, சந்தேகநபர் அந்தப் பொலிஸ் அதிகாரியின் துப்பாக்கியைப் பறிக்க முயன்றதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். அங்கு ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக பொலிஸாரால் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் சந்தேகநபர் காயமடைந்துள்ளதுடன், அவர் மீண்டும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவத்தின் போது, பொலிஸ் அதிகாரி ஒருவரும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அம்பாறை பொலிஸார் தெரிவித்தனர்.