நாட்டில் மீண்டும் பொருளாதார நெருக்கடி ஏற்படாது - ஜனாதிபதி



2022 ஆம் ஆண்டைப் போன்றதொரு பொருளாதார நெருக்கடி நாட்டில் மீண்டும் ஏற்படும் என சிலர் கருத்துக்களை வெளியிட்டு வந்தாலும், அவ்வாறானதொரு நிலைமை நாட்டில் எந்த வகையிலும் ஏற்படாது என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
 
மத்திய கிழக்கில் நிலவும் யுத்த சூழ்நிலை காரணமாக ஏற்பட்டுள்ள நிலைமையானது ஒரு வெளிப்புற நெருக்கடியாக இருந்தபோதிலும், அதனையும் முகாமைத்துவம் செய்துகொள்ளக்கூடிய சக்தி அரசாங்கத்திடம் உள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

நிந்தவூர் கலாசார நிலையத்தின் கட்டுமானப் பணிகளை மீண்டும் ஆரம்பிக்கும் நிகழ்வில் இன்று (22) முற்பகல் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இதனைக் குறிப்பிட்டார்.

நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துதல், இனவாதத்திற்கு இடமளிக்காதிருத்தல், ஊழல்வாதிகளுக்குத் தண்டனை வழங்குதல், அனைவருக்கும் சட்டம் சமமாக நடைமுறைப்படுத்தப்படும் நாட்டை உருவாக்குதல் மற்றும் அரசியல்வாதிகளின் எல்லையற்ற சலுகைகளைக் குறைத்தல் ஆகியவையே தற்போதைய அரசாங்கத்தை ஆட்சிக்குக் கொண்டுவருவதற்காக மக்கள் வழங்கிய மக்கள் ஆணையின் எதிர்பார்ப்பாக இருந்தது.

அதற்காக அரசாங்கம் தற்போது கணிசமான அளவு பணிகளை ஆற்றியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

அதேபோல், அனைவருக்கும் சட்டம் சமமாக நடைமுறைப்படுத்தப்படும் நாட்டை உருவாக்கும் பொறுப்பு தமது அரசாங்கத்தின் கீழ் நிறைவேற்றப்படாவிட்டால், வேறு எந்தவொரு அரசாங்கத்தின் கீழும் அது நிறைவேறாது எனச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இன்று அதிகாரம், செல்வம் மற்றும் அந்தஸ்த்து ஆகியவற்றைப் பார்க்காமல் அனைவருக்கும் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாகவும் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், ஓய்வூதியம் உள்ளிட்ட அரசியல்வாதிகளின் எல்லையற்ற சலுகைகளை ஒழித்து, அரசியல்வாதிகளை மக்களுக்காகப் பணியாற்றும் ஒரு குழுவாக மாற்றுவதற்கு தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

1999 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட நிந்தவூர் கலாசார நிலையத்தின் கட்டுமானப் பணிகள் 2014 ஆம் ஆண்டு முதல் முழுமையாக நிறுத்தப்பட்டிருந்தன.

மிகவும் வளமான கலாசார பாரம்பரியத்தைக் கொண்ட அம்பாறை மாவட்டத்தின் கலாசார விழுமியங்களைப் பாதுகாத்து எதிர்கால சந்ததியினருக்குக் கையளிக்கும் நோக்கிலும், அம்பாறை மாவட்ட மக்களின் நீண்டகால கோரிக்கைக்கு அமைவாகவும், இந்த பணிகள் ஆரம்பிக்கப்பட்டு 24 வருடங்களின் பின்னர் கட்டுமானப் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இத்திட்டத்திற்கான மொத்த மதிப்பிடப்பட்ட தொகை 945.04 மில்லியன் ரூபாய் ஆகும் என்பதுடன், அதில் 300 மில்லியன் ரூபாய் நிதியொதுக்கீடு 2026 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்டுள்ளது.

எஞ்சிய நிதியொதுக்கீடுகளும் தேவைக்கேற்ப ஒதுக்கப்படவுள்ளதுடன், திட்டத்தின் ஒட்டுமொத்த கட்டுமானப் பணிகளும் 2027-12-31 ஆம் திகதியளவில் நிறைவடையவுள்ளன.