மல்வானை காணியை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்க பிரதமர் சம்மதம் ; பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தைக் கைவிட்டனர்!


 தொம்பே பிரதேச செயலகத்தின் பொறுப்பில் உள்ள, மல்வானை பகுதியில் அமைந்துள்ள காணி மற்றும் வீட்டை, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிடம் ஒப்படைப்பதற்குப் பிரதமர் சம்மதம் தெரிவித்துள்ளதாக அந்தரே பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

பிரதமர் அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை (18) பிரதமருடன் நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் பின்னர், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அந்தரே பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் சசிந்து பெரேரா இதனை தெரிவித்துள்ளார்.

குறித்த கலந்துரையாடலின்போது, குறித்த காணியை மிக விரைவில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு மாற்றுவதற்குத் தீர்மானிக்கப்பட்டதால், தற்போது தாங்கள் ஆக்கிரமித்துள்ள வளாகத்திலிருந்து உடனடியாக வெளியேறுவதற்குத் தம்மோடு இணைந்த குழுவினர் நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

மல்வானை காணியை வரும் நாட்களில் மிக விரைவில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிடம் ஒப்படைப்பதாகப் பிரதமர் உறுதியளித்துள்ளார். நாம் விடுத்த கோரிக்கைக்கு அரசாங்கத் தரப்பிலிருந்து சாதகமான பதில் கிடைத்துள்ளது. அந்தப் பதிலைத் தொடர்ந்து, மல்வானை காணி வளாகத்திலிருந்து வெளியேற நாம் தீர்மானித்துள்ளோம் என்றார்.