வெளிவிவகார அமைச்சின் e-DAS கட்டமைப்பில் கோளாறு: ஆவண சான்றளிப்பு சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்!


வெளிவிவகார அமைச்சின் மின்னணு ஆவண சான்றளிப்பு கட்டமைப்பில் (e-DAS) ஏற்பட்டுள்ள திடீர் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, அனைத்து ஆவண சான்றளிப்பு சேவைகளும் மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.

பத்தரமுல்லையில் அமைந்துள்ள தூதரக விவகாரப் பிரிவின் முதன்மை அலுவலகம் மற்றும் யாழ்ப்பாணம், திருகோணமலை, கண்டி, மாத்தறை, குருநாகல் ஆகிய பகுதிகளில் உள்ள பிராந்திய தூதரக அலுவலகங்களின் சேவைகளும் இவ்வாறு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய தொழில்நுட்ப சேவை வழங்குநர்களுடன் இணைந்து, e-DAS கட்டமைப்பை மிக விரைவாக வழமைக்குக் கொண்டு வந்து, சாதாரண சேவைகளை ஆரம்பிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

ஏற்கனவே இணையத்தளம் மூலமாக நேரத்தை ஒதுக்கியுள்ள விண்ணப்பதாரர்கள், அடுத்தகட்ட அறிவிப்புகள் மற்றும் இற்றைப்படுத்தல்களை (Updates) அறிந்துகொள்ள 'e-Channeling' கட்டமைப்பைக் அவதானிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

கட்டமைப்பு வழமைக்குத் திரும்பியவுடன் அது குறித்த விபரங்கள் அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் உடனடியாக அறிவிக்கப்படும் என அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது. இந்த திடீர் முடக்கம் காரணமாக பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள அசௌகரியங்களுக்கு தூதரக விவகாரப் பிரிவு தனது வருத்தத்தைத் தெரிவித்துள்ளது.