இலங்கை ஏற்றுமதிகள் மீதான மேலதிக வரியை 10% ஆகக் குறைத்தது அமெரிக்கா – நிதி அமைச்சு


கட்டாய உழைப்பின் மூலம் தயாரிக்கப்படும் பொருட்களின் இறக்குமதிக்குத் தடை விதிப்பதற்கு இலங்கை அரசாங்கம் எடுத்த தீர்மானத்தையடுத்து, இலங்கை ஏற்றுமதிகள் மீது விதிக்க முன்மொழியப்பட்டிருந்த 12.5 சதவீத மேலதிக வரியை 10 சதவீதம் என்ற குறைந்தபட்ச வீதம் வரை குறைக்க அமெரிக்கா தீர்மானித்துள்ளது.

நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :

அமெரிக்காவின் இந்தத் தீர்மானமானது நாட்டின் ஏற்றுமதியாளர்களுக்குப் பெரும் சாதகமான விளைவை ஏற்படுத்தும். அத்துடன், நியாயமான வர்த்தகம், பொறுப்புமிக்க வணிக நடைமுறைகள் மற்றும் சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தொழிலாளர் தரங்களை மேம்படுத்துவதில் இலங்கை கொண்டுள்ள தொடர்ச்சியான அர்ப்பணிப்பையும் இது பிரதிபலிக்கிறது.

மேலும், இந்த வரித் திருத்தம் அமெரிக்கச் சந்தையில் இலங்கை ஏற்றுமதிப் பொருட்களின் போட்டித்தன்மையை கணிசமாக அதிகரிப்பதுடன், நிலையான பொருளாதார சீர்திருத்தங்களுக்கான இலங்கையின் முனைப்பு குறித்து சர்வதேச முதலீட்டாளர்கள் மற்றும் கொள்வனவாளர்களுக்கு ஒரு சாதகமான சமிக்ஞையை வழங்கும்.

இதன் மூலம் நிலையான பொருளாதார வளர்ச்சிக்கு ஆதரவளிக்கும் ஏற்றுமதியாளர்களுக்குப் பலன்களை அளிக்கும் நவீன மற்றும் வெளிப்படைத்தன்மை கொண்ட சந்தைச் சூழல் உருவாக்கப்படுவதாகவும் நிதி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.