
2022 ஆம் ஆண்டு இலங்கை எதிர்கொண்ட அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடியின் போது, ஜனாதிபதி பதவியை ஏற்கும் முதல் தேர்வாக தாம் இருக்கவில்லை என்றும், மற்றவர்கள் பொறுப்பேற்கத் தயங்கிய நிலையில் தாம் முன்வந்ததாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
அண்மையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய அவர், அப்போது ஐக்கிய தேசியக் கட்சி (UNP) நாடாளுமன்றத்தில் ஒரே ஒரு ஆசனத்தை மட்டுமே கொண்டிருந்ததாக நினைவுகூர்ந்தார்.
"நான் முதல் தேர்வாக இருக்கவில்லை. ஒருவேளை நான்காவது தேர்வாக இருந்திருக்கலாம். இருப்பினும், இந்த நெருக்கடியை சமாளிக்க முடியும் என்ற நம்பிக்கையுடன் பொறுப்பை ஏற்றேன். பொருளாதாரத்தை நிலைநிறுத்தி நாட்டை மீட்டெடுப்பதே எனது இலக்காக இருந்தது," என்று அவர் கூறினார்.
ஜனாதிபதி பொறுப்பை ஏற்க தனிப்பட்ட தயாரிப்பு எதுவும் தேவையில்லை என்றும், அதற்குத் தயாராக இருக்க வேண்டியது அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
"அந்தப் பதவிக்காக தனியாக உங்களைத் தயார்படுத்த முடியாது. நீங்கள் எப்போதும் தயாராக இருக்க வேண்டும். தயாராக இல்லையெனில் அந்தப் பொறுப்பை ஏற்கக் கூடாது," என ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
நாடு கடுமையான நெருக்கடியில் இருந்த வேளையில் வேறு எந்த அரசியல் தலைவரும் அந்தப் பொறுப்பை ஏற்க முன்வராததால், நாட்டின் நலனைக் கருத்தில் கொண்டு தாம் பொறுப்பேற்றதாகவும் அவர் கூறினார்.
பொருளாதாரத்தை நிலைநிறுத்தி, சர்வதேச நம்பிக்கையை மீட்டெடுத்து, நாடாளுமன்றத்தின் ஒத்துழைப்புடன் சீர்திருத்தங்களை முன்னெடுப்பதே தமது முதன்மை நோக்கமாக இருந்ததாகவும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.






.jpg)






