2026 க.பொ.த உயர்தரப் பரீட்சை ஆகஸ்ட் 10 இல் ஆரம்பம் : அனுமதி அட்டைகள் விநியோகம்


2026ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 10ஆம் திகதி முதல் செப்டம்பர் 5ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் உள்ள 2,532 பரீட்சை மையங்களில் நடைபெறவுள்ளதுடன், பரீட்சார்த்திகளுக்கான அனுமதி அட்டைகள் விநியோகிக்கும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.

பாடசாலை விண்ணப்பதாரர்களுக்கான அனுமதி அட்டைகள் ஏற்கனவே உரிய வலையக் கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதற்கமைய, பாடசாலை அதிபர்கள் தத்தமது வலையக் கல்வி அலுவலகங்களில் பரீட்சைகளுக்குப் பொறுப்பான பிரதி அல்லது உதவி கல்விப் பணிப்பாளர்களிடமிருந்து இவற்றைச் சென்று பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

அதேவேளை, தனிப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கான அனுமதி அட்டைகள் அவர்களின் பதிவு செய்யப்பட்ட வீட்டு முகவரிகளுக்குத் தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. அனுமதி அட்டைகளில் ஏதேனும் தவறுகள் அல்லது திருத்தங்கள் காணப்படின், அவற்றை இணையவழியில் திருத்துவதற்கான வசதிகளும் பரீட்சைத் திணைக்களத்தினால் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

பாடசாலை அதிபர்கள் தமக்கு வழங்கப்பட்டுள்ள பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தியும், தனிப்பட்ட விண்ணப்பதாரர்கள் தமது தேசிய அடையாள அட்டை இலக்கத்தை உள்ளீடு செய்தும் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தினூடாக இத்திருத்தங்களை மேற்கொள்ள முடியும்.

இத்திருத்தங்கள் அனைத்தும் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 3ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணிக்கு முன்னர் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றும், இந்த இறுதி அவகாசம் எந்தக் காரணம் கொண்டும் நீடிக்கப்படமாட்டாது என்றும் திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.

பரீட்சை தொடர்பில் மேலதிக தகவல்கள் அல்லது சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ள விரும்பும் பரீட்சார்த்திகள், பரீட்சைத் திணைக்களத்தின் 1911 என்ற உடனடி அழைப்பு இலக்கத்தையோ அல்லது 011-2784208, 011-2784537 ஆகிய தொலைபேசி இலக்கங்களையோ தொடர்புகொள்ள முடியும். அத்துடன் 011-2784422 என்ற தொலைநகல் மற்றும் gcealexamsl@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி ஊடாகவும் திணைக்களத்தைத் தொடர்புகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.