புகைப்பிடிப்பதால் இலங்கையில் நாள்தோறும் 50 உயிரிழப்புகள் ; ஆண்டுக்கு ரூ.214 பில்லியன் சுமை – பேராசிரியர் எச்சரிக்கை


இலங்கையில் புகைப்பிடித்தல் பாவனை காரணமாக நாளாந்தம் சுமார் 50 மனித உயிரிழப்புகள் ஏற்படுவதுடன், நாட்டின் பொருளாதாரமும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதாக பேராசிரியர் எல்.எல். அமில இசுரு தெரிவித்துள்ளார்.

வெள்ளிக்கிழமை (17) நடைபெற்ற பிரத்தியேக நேர்காணலின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

சுகாதார அமைச்சின் தரவுகளின்படி, புகைப்பிடித்தல் காரணமாக இலங்கையில் நாளாந்தம் சுமார் 50 பேர் மரணமடைவதுடன், ஒரு ஆண்டுக்கு 20,000 இளம் உயிர்கள் இதனால் பறிபோகின்றன.

புகைப்பவர்களின் நேரடி மற்றும் மறைமுக சுகாதாரப் பிரச்சினைகளுக்காக அரசாங்கம் வருடாந்தம் சுமார் 214 பில்லியன் ரூபாயைச் செலவிட வேண்டியுள்ளது.

உலகளவில் அதிகளவான புகைப்பிடித்தல் காரணமாக மாத்திரம் 1.6 மில்லியன் மக்கள் உயிரிழக்கிறார்கள். புகையிலை மூலம் அரசாங்கத்திற்குக் கிடைக்கும் வரி வருமானத்தை விட, அதனால் புகைப்பிடிப்பவர்களுக்கு ஏற்படும் பக்கவாதம், மாரடைப்பு உள்ளிட்ட இதய நோய்கள், பல்வேறு வகையான புற்றுநோய்கள் மற்றும் கல்லீரல் சிதைவு போன்ற கொடிய நோய்களுக்கான சிகிச்சைக்காக அரசாங்கம் மூன்று மடங்கு அதிக நிதியை மக்களின் வரிப்பணத்தில் இருந்து வருடாந்தம் சுமார் 214 பில்லியன் ரூபாயை நேரடியாகவும் மறைமுகமாகவும் செலவிடுகிறது.

இவ்வாறு செலவிடுவதால் இது நாட்டின் பொருளாதாரத்திற்கு ஒரு பெரும் சுமையாக மாறியுள்ளது. மேலும், சிகரெட் புகைப்பவர்கள் தங்களைச் சுற்றியுள்ள புகைக்காத பொதுமக்களுக்கும், குறிப்பாகத் தங்களது குடும்ப உறுப்பினர்களுக்கும் பெரும் தீங்கை விளைவிப்பதுடன், உலகளவில் இவ்வாறு மற்றவர்கள் வெளியிடும் புகையைச் சுவாசிப்பதன் காரணமாக மாத்திரம் வருடாந்தம் 1.6 மில்லியன் மக்கள் உயிரிழப்பதாக உலகளாவிய சுகாதாரத் தரவுகள் எச்சரிக்கின்றன.

இவ்வாறானதொரு பின்னணியில், இலங்கையில் புகையிலை மற்றும் மதுபானம் மீதான தேசிய அதிகார சபை மற்றும் இலங்கை மருத்துவ சங்கம் ஆகியன இணைந்து, 2010 ஆம் ஆண்டுக்குப் பிறகு பிறந்த தலைமுறையினருக்கு புகைப்பிடித்தல் தயாரிப்புகளை விற்பனை செய்வதை முற்றாகத் தடை செய்வதற்கான சட்டப் பூர்வ நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த திட்டம் நடைமுறைக்கு வரும் பட்சத்தில், உலகிற்கே இலங்கை ஒரு முன்மாதிரியான நாடாகத் திகழும் என்றார்.