நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் தொடர்பில் பூரண விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன. சிறைக்கைதிகளின் மனித உரிமையை பாதுகாப்பதை போன்று பொலிஸ் உத்தியோகத்தர்களின் மனித உரிமைகளையும் பாதுகாக்க வேண்டும்.
மனித உரிமைகளில் நிலை அடிப்படையில் வேறுபாடுகள் கிடையாது என்பதை எதிர்க்கட்சியினர் விளங்கிக் கொள்ள வேண்டும். அனைத்தையும் அரசியலுக்கு பயன்படுத்தும் கொள்கையில் இருந்து எதிர்க்கட்சித் தலைவர் விடுபட வேண்டும் எனவும் தெரிவித்தார்.
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி கொண்டுவரவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் சம்பவம் துரதிஸ்டவசமானது. மோதலில் உயிரிழந்த சிறைக்கைதிகள் மற்றும் சிறைச்சாலை உத்தியோகத்தர்களின் இழப்பு கவலைக்குரியது. உறவுகள் இழக்கப்படும் போது அந்த குடும்பத்தின் வேதனை எவ்வாறு இருக்கும் என்பதை மனிதனாக என்னால் விளங்கிக் கொள்ள முடியும்.
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட குழு மற்றும் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அலுவலகம் சிறந்த நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது.ஆகவே விசாரணைகள் வெளிப்படைத்தன்மையாக இடம்பெறுகிறது.
சிறைக்கைதிகளின் உரிமை பற்றி பேசும் தரப்பினர் உயிரிழந்த சிறைச்சாலை உத்தியோகத்தர்களின் மனித உரிமைகள் பற்றி பேசுவதில்லை.இது கவலைக்குரியது. சிறைக்கைதிகள் மற்றும் சிறைச்சாலை உத்தியோகத்தர்களின் உரிமைகளை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கு உண்டு. வகிக்கும் நிலையை அடிப்படையாகக் கொண்டு மனித உரிமைகளை வேறுப்படுத்த முடியாது.
சிறைச்சாலைகளில் நெரிசல், போதைப்பொருள் பாவனையை ஒழிப்பதற்கும், ஒழுங்குப்படுத்தப்பட்ட குற்றச்செயல்களை தடுப்பதற்கும் முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளினால் பெருமளவிலானோர் கைது செய்யப்படுகிறார்கள். அதனால் தான் சிறைச்சாலையில் நெரிசல் தீவிரமடைந்துள்ளது என்று எதிர்க்கட்சியினர் குறிப்பிடுகிறார்கள். சிறைச்சாலைகளில் நெரிசல் காணப்படுவது என்பதால் குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களை கைது செய்யாமல் இருக்க முடியுமா ?
நீர்கொழும்பு சம்பவத்தில் தற்போது எவரையும் குற்றஞ்சாட்ட முடியாது. பழி சுமத்த முடியாது. முதலில் நிலைமை கட்டுப்படுத்தி பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். இந்த சம்பவம் தொடர்பில் சுயாதீனமான முறையில் விசாரணைகள் துரிதமாக முன்னெடுக்கப்படும்.
சிறைச்சாலைகளின் நெரிசல் நிலையை கட்டுப்படுத்த சட்டத்திருத்தம் ஊடாக விசேட கவனம் செலுத்தப்பட்டு அதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம்.புதிய சிறைச்சாலைகளை உருவாக்குவது அரசாங்கத்தின் நோக்கமல்ல, சமூகத்தில் குற்றச்செயல்களை ஒழிப்பதை பிரதான கொள்கையாக கொண்டு செயற்படுகிறோம்.
தண்டனையளிக்கப்பட்டுள்ள சிறைக்கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்குவது தொடர்பில் முறையான வழிமுறைகளை கையாள்வது குறித்து ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட குழு தற்போது அறிக்கை சமர்ப்பித்துள்ளது. அந்த அறிக்கையின் பிரகாரம் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். சிறுசிறு குற்றங்களுக்காக தண்டப்பணம் செலுத்த முடியாமல் சிறையில் உள்ளவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்க விசேட கவனம் செலுத்தப்படும்.
சிறைச்சாலை நெரிசல் பற்றி தற்போது ஆலேராசனை வழங்கும் எதிர்க்கட்சித் தலைவர் 2024 ஆம் ஆண்டுக்கு முன்னர் என்ன செய்துக் கொண்டிருந்தார்.நாட்டில் உள்ள சகல சிறைச்சாலைகளிலும் 10 ஆயிரம் கைதிகள் இருப்பதற்கான வசதி காணப்படுகின்ற நிலையில் தற்போது 27 ஆயிரம் பேர் வரையில் உள்ளார்கள்.கடந்த கால அரசாங்கங்கள் உரிய நடவடிக்கைகளை எடுத்திருந்தால் சிறைச்சாலை நெரிசலை கட்டுப்படுத்தியிருக்கலாம்.
இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்தின் அறிக்கை கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதால் சந்தேக நபர்கள் மாதகணக்கில் சிறைச்சாலையில் விளக்கமறியலில் இருக்க வேண்டிய நிலை காணப்படுகிறது.நாங்கள் ஆட்சிக்கு வரும் போது இரசாயன பகுப்பாய்வுத் திணைக்களத்தில் 118 வெற்றிடங்கள் காணப்பட்டன.
தற்போது 78 பேருக்கு நியமனங்களை வழங்கியுள்ளோம். சிறைச்சாலைகளிலும் ஆளணி பற்றாக்குறை காணப்படுகிறது. சிறைச்சாலை சேவைக்கு விண்ணப்பிப்பதற்கு இளைஞர்கள் மத்தியில் பெரிதளவில் ஈடுபாடு காணப்படுவதில்லை. தற்போது சேவையில் உள்ள அதிகாரிகளின் சேவை காலத்தை அதிகரிப்பதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளன. இது குறித்தும் தற்போது பரிசோதிக்கப்படுகிறது .
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் சம்பவத்தை பொறுப்பேற்பதாக தெளிவாக குறிப்பிட்டுள்ளேன். பொறுப்பேற்க முடியாது என்று ஒருபோதும் குறிப்பிடவில்லை.பொறுப்பில் இருந்தும் விலகவில்லை. எதிர்க்கட்சியினர் கொண்டு வரும் நம்பிக்கையில்லா பிரேரணையை சிறந்த முறையில் அரசாங்கமாக எதிர்கொள்வோம். எதிர்க்கட்சியினர் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவை.அரசியல் நோக்கத்தை இலக்காகக் கொண்டவை என்றார்.





.jpg)





.jpg)


