அம்பாறையில் இரு வேறு பகுதிகளில் உயிர்மாய்த்த நிலையில் இரு பெண்கள் மீட்பு; பொலிஸார் விசாரணை


அம்பாறை மாவட்டத்தின் இரு வேறு பகுதிகளில் தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்த இரு பெண்களின் சடலங்கள், மரண விசாரணைகள் மற்றும் பிரேத பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் நல்லடக்கத்திற்காக ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 
மருதமுனை சம்பவம் 

மருதமுனை 6ஆம் பிரிவைச் சேர்ந்த தௌபீக் சினாத் றினா (20) என்ற திருமணமாகாத இளம்பெண், கடந்த செவ்வாய்க்கிழமை (21) மாலை தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

இந்த உயிரிழப்பு தொடர்பாக சமூக ஊடகங்களில் பல்வேறு கருத்துகள் மற்றும் விமர்சனங்கள் வெளியாகியதைத் தொடர்ந்து, பெரிய நீலாவணை பொலிஸாரும் அம்பாறை மாவட்ட தடயவியல் பிரிவு அதிகாரிகளும் பல்வேறு கோணங்களில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கல்முனை நீதிமன்ற பதில் நீதிவான் ஏ.ஆர்.எம். கலீல் சம்பவ இடத்திற்குச் சென்று மரண விசாரணை மேற்கொண்டதுடன், மரணத்தில் சந்தேகத்திற்கிடமான சூழ்நிலை இருப்பதாகக் கருதி பிரேத பரிசோதனை நடத்த உத்தரவிட்டார்.

அம்பாறை மாவட்ட பொது வைத்தியசாலையில் சட்ட வைத்திய அதிகாரியால் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின் போது, உயிரிழப்பிற்கான துல்லியமான காரணத்தை உறுதிப்படுத்துவதற்காக சடலத்திலிருந்து பெறப்பட்ட சில உயிரியல் மாதிரிகள் மேலதிக ஆய்வுக்காக கொழும்பிலுள்ள அரச பகுப்பாய்வுத் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

பிரேத பரிசோதனை நிறைவடைந்ததைத் தொடர்ந்து, சடலம் புதன்கிழமை (22) மாலை உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பெரிய நீலாவணை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பூபாலசிங்கம் கஜேந்திரன் தலைமையிலான குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
 
சம்மாந்துறையில் ஒரு பிள்ளையின் தாய் உயிரிழப்பு

இதேவேளை, சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஜீட்புரம் மல்வத்தை–03 பகுதியைச் சேர்ந்த சிப்னா (28) என்ற ஒரு பிள்ளையின் தாய், வியாழக்கிழமை (23) மாலை தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்திருந்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பான மரண விசாரணை வெள்ளிக்கிழமை (24) சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில், சம்மாந்துறை நீதிவான் நூர்டீன் முஹம்மட் சர்ஜுன் முன்னிலையில் நடைபெற்றது.

விசாரணைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

உயிரிழந்த பெண்ணின் கணவர் வெளிநாட்டில் வசித்து வருவதாகத் தெரிவிக்கப்படும் நிலையில், மரணத்திற்கான காரணங்கள் மற்றும் பின்னணி தொடர்பில் சம்மாந்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.