பேஸ்புக் மூலம் வாகனங்களை விற்றுவிட்டு மீண்டும் கொள்ளையடித்த கும்பல்: ஒருவர் கைது, பலரைத் தேடி பொலிஸார் வலைவீச்சு


 
பேஸ்புக் ஊடாக விளம்பரம் செய்து வாகனங்களை விற்பனை செய்த பின்னர், திட்டமிட்ட முறையில் அந்த வாகனங்களைப் பின்தொடர்ந்து சென்று ஆயுதமுனையில் மீண்டும் கொள்ளையடித்து வந்த கும்பலைச் சேர்ந்த ஒருவர் மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் யக்கல பகுதியைச் சேர்ந்த 59 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

40 இலட்சம் ரூபா பணம் செலுத்தி கொள்வனவு செய்யப்பட்ட வேன் வண்டியொன்று, துப்பாக்கிகளை ஏந்திய சிலரால் கொள்ளையிடப்பட்டதாக கடந்த ஜூலை 01 ஆம் திகதி பொலிஸ் மா அதிபர் உதவிப் பிரிவில் நபர் ஒருவரால் முறைப்பாடு செய்யப்பட்டது.

இதனடிப்படையில், மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகள் குழுவொன்று விசாரணைகளை ஆரம்பித்தது.

இதன்போது, இந்த விசித்திரமான கொள்ளைச் சம்பவத்துடன் பெலும்மஹர, முதுன்கொட பகுதியில் அமைந்துள்ள வாகன விற்பனை நிலைய உரிமையாளர் உட்பட சுமார் 10 பேர் தொடர்புபட்டுள்ளமை கண்டறியப்பட்டது.

சந்தேகநபர்கள் வாகனங்களை விற்பனை செய்வதற்காக பேஸ்புக்கில் விளம்பரங்களை இட்டுள்ளனர். அதனை நம்பி வாங்குபவர்களிடம் வாகனத்தை விற்று பணத்தைப் பெற்றுக் கொண்ட பின்னர், திட்டமிட்ட முறையில் அந்த வாகனத்தைப் பின்தொடர்ந்து சென்று, வழிமறித்து கொள்ளையிடுவதை இவர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளமை ஆரம்பக்கட்ட விசாரணைகளில் அம்பலமாகியுள்ளது.

இதுபோன்ற மேலும் இரண்டு கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பிலும் இந்த கும்பலுக்கு எதிராக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இக்கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் வாகன விற்பனை நிலைய உரிமையாளர் உள்ளிட்ட ஏனைய சந்தேகநபர்கள் தற்போது பிரதேசத்தை விட்டு தப்பியோடியுள்ளனர்.

எனினும், நிட்டம்புவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கலகெடிஹேன பகுதியில் அமைந்துள்ள வாகன விற்பனை நிலைய உரிமையாளரின் வீட்டில் சோதனையிட்ட பொலிஸார், அங்கிருந்து 2 வாள்கள், 2 பிஸ்டல் மெகசின்கள், 3 தோட்டாக்கள் மற்றும் ஒரு ஜீப் வண்டி என்பவற்றைத் தம்வசம் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நேற்று செவ்வாய்க்கிழமை (14) கம்பஹா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, நாளை வியாழக்கிழமை 16) வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், தப்பியோடிய ஏனைய சந்தேகநபர்களைக் கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளில் மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவினர் ஈடுபட்டு வருகின்றனர்.