
சுற்றாடல், இயற்கை வளங்கள், விவசாயம் மற்றும் நிலையான அபிவிருத்தி பற்றிய மேற்பார்வைக் குழுவில் நெல் கொள்வனவு மற்றும் நாட்டின் அரிசித் தேவை குறித்து விவாதிக்கவிருந்த நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் என்ற ரீதியில் தம்மால் அங்கு பார்வையாளராக மட்டுமே கலந்துகொள்ள முடியும் என்றும், கருத்துக்களை வெளியிட முடியாது என்றும் தற்போதைய அரசாங்கம் தடை விதித்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
10ஆம் திகதி வெள்ளிக்கிழமை விசேட கூற்றொன்றை முன்வைத்து அவர் இதனைத் தெரிவத்தார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
பாராளுமன்ற நிலையியற் கட்டளைகளைப் பயன்படுத்தி எதிர்க்கட்சிகளை முடக்குவதற்கு அரசாங்க உறுப்பினர்கள் எடுக்கும் இந்த முயற்சி, எங்களை அதிகாரத்துக்கு கொண்டு வந்த விவசாய மக்களுக்கு இழைக்கும் கேவலமான துரோகமாகும்.
கடந்த அரசாங்கமும் இதேபோன்று நிதிக்குழுவில் எனது பங்கேற்பைத் தடுத்து ஜனநாயக விரோதமாகச் செயல்பட்டது. தற்போதைய அரசாங்கமும் அதே வழியைப் பின்பற்றி விவசாயிகளின் குரலை நசுக்கப் பார்க்கிறது. விவசாயப் பிரதிநிதிகளைத் தான் சந்தித்து, அவர்களின் பிரச்சினைகளை பாராளுமன்றத்தில் முன்வைக்கும் வரை நெல்லுக்கான நிலையான விலையை அரசாங்கம் விசேட வர்த்தமானியில் வெளியிடவில்லை.
தற்போது பல்வேறு நிபந்தனைகளுடன் நாடு நெல் 120 ரூபாவுக்கும், சம்பா 130 ரூபாவுக்கும், கீரி சம்பா 140 ரூபாவுக்கும் விலை நிர்ணயித்துவிட்டு எதிர்க்கட்சிகளின் குரலை முடக்கப் பார்க்கின்றனர். நெல் கிலோவொன்றிற்கு 137 ரூபா செலவாவதாக விவசாய ஆராய்ச்சி நிறுவனமே குறிப்பிட்டுள்ள நிலையில், அதனைக் காட்டிலும் குறைந்த விலைக்கு நெல் கொள்வனவு செய்யப்படுவது குறித்துக் கேள்வி எழுப்புவது தடை செய்யப்பட்டுள்ளது.
தேர்தல் காலத்தில் வயல்களில் நின்றுகொண்டு நெல்லுக்கு 150 ரூபா நிலையான விலை தருவதாகக் கூறிவிட்டு, இன்று விவசாயிகளின் உரிமைகளைப் பறிக்கின்றனர். பாராளுமன்றக் குழுக்களுக்குள் எதிர்க்கட்சியின் குரலை ஒடுக்கினாலும், விவசாய மக்களுக்கான எங்களது போராட்டம் என்றார்.





.jpg)






.jpg)
