எதிர்க்கட்சிகளின் ஒன்றிணைவால் அரசாங்கம் அச்சமடைந்துள்ளது – ரஞ்சித் மத்தும பண்டார


எதிர்க்கட்சிகள் தற்போது ஒரே தளத்தில் ஒன்றிணைந்து செயற்படத் தொடங்கியுள்ள நிலையில், அதனால் அரசாங்கம் அச்சமடைந்துள்ளதாகவும், இதன் காரணமாக தன்னிச்சையாக முன்னெடுத்த சில நடவடிக்கைகளை மீளாய்வு செய்யும் நிலைக்கு அரசாங்கம் தள்ளப்பட்டுள்ளதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி தலைமையகத்தில் வெள்ளிக்கிழமை (24) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், அரசாங்கத்தின் ஜனநாயக விரோத மற்றும் தன்னிச்சையான நடவடிக்கைகளுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளும் தற்போது ஒன்றிணைந்து செயற்பட்டு வருவதாகக் கூறினார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோருக்கிடையிலான சந்திப்பு திடீரென நடைபெற்றதல்ல என்றும், நீண்டகாலமாக முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தைகளின் விளைவாகவே அது சாத்தியமானதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எதிர்வரும் தேர்தல்களில் எதிர்க்கட்சிகள் ஒரே கூட்டணியாகப் போட்டியிடுவதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும், கூட்டணியின் தலைமைத்துவம் தொடர்பான விவகாரம் உரிய நேரத்தில் சுமுகமாகத் தீர்க்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், ஐக்கிய மக்கள் சக்தி ஊழல் குற்றச்சாட்டுகளற்ற தூய்மையான அரசியல் கட்சியாக இருப்பதாகக் கூறிய அவர், கட்சியின் தலைவர், பொதுச் செயலாளர் அல்லது நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது எந்தவித ஊழல் குற்றச்சாட்டுகளும் இல்லை என்றார்.

அதேவேளை, தற்போதைய அரசாங்கத்தில் நிலக்கரி, வங்கி மற்றும் கொள்கலன் தொடர்பான பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் காணப்படுவதாகவும், அவற்றில் தொடர்புடையவர்களைப் பாதுகாக்கும் நோக்கிலேயே அரசாங்கம் செயற்படுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

அரசாங்கத்திற்கு இன்னும் மக்களிடையே பெரும் ஆதரவு இருப்பதாகக் கூறப்படுவதை ஏற்க முடியாது எனத் தெரிவித்த அவர், உண்மையில் மக்களின் ஆதரவு இருப்பின் காலதாமதமின்றி மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு அரசாங்கத்திற்கு சவால் விடுத்தார்.

பாராளுமன்றத் தெரிவுக்குழுக்களை பயன்படுத்தி மாகாண சபைத் தேர்தலை காலவரையறையின்றி ஒத்திவைக்க அரசாங்கம் முயற்சிப்பதாகவும், அதனைப் புறக்கணிப்பது குறித்து எதிர்க்கட்சிகள் ஆலோசித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இறுதியாக, ரணில் விக்கிரமசிங்க மற்றும் சஜித் பிரேமதாச ஆகியோருக்கிடையிலான சந்திப்பு மிகவும் சுமூகமான சூழலிலும் சிறந்த புரிந்துணர்வுடனும் நடைபெற்றதாக ரஞ்சித் மத்தும பண்டார குறிப்பிட்டார்.