அர்ச்சுனா எம்.பி.க்கு எதிரான பிடியாணை உத்தரவு பாராளுமன்றத்தில் சர்ச்சை - சிறப்புரிமை மீறலா? சட்ட நடைமுறையா? சபையில் சூடுபிடித்த விவாதம்



யாழ். மாவட்ட சுயேட்சைக் குழு பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனுக்கு எதிராக கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்டுள்ள பிடியாணை உத்தரவு தொடர்பில் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் கடும் சர்ச்சையை ஏற்படுத்தினர்.

நீதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதம் வெள்ளிக்கிழமை (24) பாராளுமன்றத்தில் இடம்பெற்றுக் கொண்டிருந்தபோது, தனக்கு எதிரான நீதிமன்ற உத்தரவு தொடர்பில் சபையில் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா சிறப்புரிமை பிரச்சினையை முன்வைத்த நிலையிலேயே சர்ச்சை ஏற்பட்டது.

இதன்போது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக கருத்துக்களை முன்வைத்து சபைக்கு தலைமை தாங்கிய பிரதி சபாநாயகர் ரிஷ்வி சாலியுடன் கடும் தர்க்கத்தில் ஈடுபட்டதுடன், ஆளும் கட்சியினர் நீதிமன்ற உத்தரவை நியாயப்படுத்தி கருத்துக்களை முன்வைத்தனர். இதனால் சபையில் சிறிது நேரம் இது தொடர்பான சர்ச்சை நிலவியது.

நீதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதம் நடைபெற்றுக்கொண்டிருந்த போது ஒழுங்கு பிரச்சினை ஒன்றை எழுப்பிய அர்ச்சுனா, தான் பாராளுமன்ற அமர்வில் இன்று கலந்துகொண்டிருக்கும் நிலையில் எனது சிறப்புரிமை மீறப்பட்டுள்ளது. அதாவது நான் நீதிமன்றத்திற்கு செல்லவில்லை என்று பிடியாணை உத்தரவொன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றார்.

இதனை தொடர்ந்து எழுந்த ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா, இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் நாங்கள் குறுஞ்செய்திகளில் அறிந்தோம். இவ்வாறு பாராளுமன்றத்திற்கு வந்துள்ள ஒருவருக்கு எதிராக பிடியாணை பிறப்பிப்பது சிறப்புரிமை பிரச்சினையாகும். இதனால் சபாநாயகர் இந்த விடயம் தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும் என்றார்.

இதன்போது தான் இந்த விடயம் தொடர்பில் பாராளுமன்ற செயலாளருக்கு அறிவித்து நீதவானுக்கு அறிவிக்க நடவடிக்கை எடுக்கின்றேன் என்று சபைக்கு தலைமை தாங்கிய பிரதி சபாநாயகர் ரிஷ்வி சாலி தெரிவித்தார்.

இவ்வேளையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலர் ஒழுங்கு பிரச்சினைகளை முன்வைத்த நிலையில், எழுந்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, பாராளுமன்ற உறுப்பினரான அர்ச்சுனா பாராளுமன்ற கூட்டத்தில் கலந்துகொள்வதானது அவருக்கு உள்ள சிறப்புரிமையாகும்.

அவர் மக்கள் வாக்குகளில் தெரிவாகிய ஒருவர். இந்த சட்டவாக்க சபையின் மக்கள் பிரதிநிதியே. அவரின் கடமைகளுக்கு எந்த நிறுவனத்தாலும் இடையூறு ஏற்படுத்த முடியாது. அவரின் பாராளுமன்ற கடமைகளுக்கு எவருக்கும் இடையூறு ஏற்படுத்த முடியாது. இது சிறப்புரிமை மீறலாகும். இது மேலான சபையில் இருப்பதற்கு அவருக்கு உரிமை உள்ளது. இது தொடர்பில் நீங்கள் தீர்மானம் எடுக்கவேண்டும் என்று பிரதி சபாநாயகரை பார்த்து கூறினார்.

இதன்போது சபைக்கு அறிவித்த பிரதி சபாநாயகர், இந்த விடயத்தில் என்னால் அறிவிப்புகள் எதனையும் விடுக்க முடியாது. இது நீதிமன்ற விடயமாகும் என்றார்.

இதன்போது, நீங்கள் நீதிமன்றத்திற்கு வருகை தராமை தொடர்பில் அறிவித்துள்ளீர்களா? இது பற்றி கடிதம் அனுப்பியுள்ளீர்களா? என்று பிரதி சபாநாயகர் அர்ச்சுனா எம்.பியை பார்த்து கேள்வியெழுப்பினார்.

இதற்கு பதிலளித்த அர்ச்சுனா, எனது சட்டத்தரணிகள் நீதிமன்றத்திற்குச் சென்றுள்ளனர். அத்துடன் நான் இந்த சபையில் இருக்கின்றேன். பேச்சாளர் பட்டியலிலும் இருக்கின்றேன் என்றார்.

இந்நிலையில் சுஜீவ சேனசிங்க உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பிக்கள் சிலரும் நீதிமன்ற உத்தரவு தொடர்பில் தமது கருத்துக்களை முன்வைத்தார்.

இதனை தொடர்ந்து பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல, எந்தவொரு சிவில் மற்றும் குற்றவியல் வழக்கிலும் பிரதிவாதி ஆஜராக வேண்டும். இதுவே சட்டம். பாராளுமன்ற உறுப்பினர் என்பதனால் அதிலிருந்து விடுபட முடியாது. அவ்வாறு போகாவிட்டால் பிணையாளர் போகவேண்டும். இதனை சரியாக புரிந்துகொள்ள வேண்டும்.

இதன்போது அமைச்சர் அநுர கருணாதிலக்க, இவ்விடத்தில் ஒருபக்க விடயம் தொடர்பில் மட்டுமே கதைக்கப்படுகின்றது. நீதிமன்றத்தில் என்ன நடந்தது என்று தெரியாது. இதனால் சரியான விளக்கம் இன்றி தீர்மானங்களை எடுக்க முடியாது. பாராளுமன்ற உறுப்பினருக்கு அநீதி நடந்திருந்தால் அது தொடர்பில் நடவடிக்கை எடுக்கலாம். இல்லாவிட்டால் எம்.பி பக்கத்தில் எடுத்திருக்கவேண்டிய நடவடிக்கை எடுக்கப்பட்டதா என்று பார்க்கவேண்டும் என்றார்.