நீதிபதிகளுக்கு மாத்திரமன்றி அரச ஊழியர்களுக்கும் வயதெல்லை நீடிக்க வேண்டும்


உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை நீடிப்பதற்கு அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலும், தமக்கும் அத்தகைய வாய்ப்பை வழங்குமாறு கோரியும் தேசிய தொழிற்சங்க மற்றும் சிவில் முன்னணியின் பிரதிநிதிகள் அடங்கிய குழுவினரால் திங்கட்கிழமை (13) ஜனாதிபதி செயலகத்தில் கோரிக்கை கடிதம் ஒன்றை கையளிக்கப்பட்டது.

முறைப்பாட்டை கையளித்த பின்னர் மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்துவர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவர் விசேட மருத்துவ நிபுணர் சமல் சஞ்சீவ ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை நீடிப்பதற்கு அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலும், அத்தகைய வாய்ப்பை எமக்கும் வழங்குமாறு கோரி இன்று தேசிய தொழிற்சங்க மற்றும் சிவில் முன்னணியின் சார்பில் ஜனாதிபதி செயலகத்தில் கோரிக்கை கடிதம் ஒன்றை கையளித்துள்ளோம்.

இலங்கையின் ஒட்டுமொத்த அரச சேவையிலும் பல வருட முதிர்ந்த அனுபவத்தைக் கொண்ட, நாட்டின் வளர்ச்சிக்கு நேரடியாகப் பங்களிக்கக்கூடிய பெருமளவிலான அரச ஊழியர்கள் இருக்கின்றனர். எனவே, அந்த அனுபவங்களை நாட்டின் நலனுக்காகப் பயன்படுத்துவதாக இருந்தால், அது ஒட்டுமொத்த அரச சேவைக்கும் பொதுவானதொரு கொள்கையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

எமக்கும் வயதான காலத்திலும் கூட அந்தந்த துறைகளில் தங்கியிருந்து பணியாற்றுவதற்கான உடல் மற்றும் மன ரீதியான தகுதி இருக்கிறது. எனவே, தொடர்ந்து பணியாற்ற விரும்பும் அனைத்து அரச ஊழியர்களுக்கும் தங்களின் ஓய்வு பெறும் வயதை நீடித்துக் கொள்வதற்கான சமமான வாய்ப்பையும் உரிமையையும் சட்டப்பூர்வமாக வழங்க வேண்டும் என்றார்.