
இலங்கை விவசாய சமூகம் தற்போது எதிர்நோக்கியுள்ள கடுமையான நெருக்கடிகளுக்கு தற்காலிக தீர்வுகளை வழங்காமல், ஒரு வலுவான தேசிய கொள்கையின் ஊடாக விவசாயத் துறையில் கட்டமைப்பு ரீதியான மாற்றங்களை ஏற்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது என்று கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க தெரிவித்தார்.
கொழும்பில் புதன்கிழமை நடைபெற்ற விசேட கலந்துரையாடல் ஒன்றில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் குறிப்பிடுகையில்,
கடந்த 1980களின் பின்னர் இலங்கையின் விவசாயத் துறை வீழ்ச்சிப் பாதையிலேயே பயணித்து வந்துள்ளது. தரமான விதை நெல் தட்டுப்பாடு, குளங்கள் மற்றும் நீர்ப்பாசனத் தொகுதிகள் முறையாகப் பராமரிக்கப்படாமை, பாரம்பரிய இயற்கை விவசாயத்திலிருந்து இரசாயன உரப் பயன்பாட்டிற்கு விவசாயிகள் பழக்கப்படுத்தப்பட்டமை மற்றும் சிறுசிறு துண்டுகளாகப் பிரிக்கப்பட்ட விவசாய நிலங்களால் உற்பத்திச் செலவு அதிகரித்தமை போன்ற பல்வேறு காரணிகளே இந்த வீழ்ச்சிக்கு வழிவகுத்துள்ளன.
அத்துடன், விவசாயத் துறையின் கூட்டுறவுப் பொறிமுறையானது நீண்டகாலமாகச் செயலிழந்து காணப்பட்டதும், விவசாயத் துறையின் பெறுமதி சங்கிலி, இடைத்தரகர்கள் மற்றும் சில பெரும் வர்த்தகர்களின் ஏகபோக ஆதிக்கம் நிலவியதும் இந்தத் துறையின் ஒரு பிரதான பலவீனமாகும்.
இந்த நிலைமைகளை மாற்றி, அமெரிக்கா, தென்கொரியா, இந்தியா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகளில் காணப்படும் வெற்றிகரமான கூட்டுறவு முறைகளைப் பின்பற்றி, நவீன தொழில்நுட்பங்களையும் கூட்டுறவு முறைகளையும் ஒருங்கிணைத்த ஒரு புதிய வேலைத்திட்டத்தை அரசாங்கம் தற்போது முன்னெடுத்து வருகின்றது. அண்மையில் ஏற்பட்ட தித்வா சூறாவளி அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, ஏக்கர் ஒன்றுக்காக இதுவரை வழங்கப்பட்ட 4,000 ரூபாவிலிருந்து 10,000 ரூபாய் வரை இழப்பீட்டுத் தொகையை அரசாங்கம் அதிகரித்துள்ளது.
மேலும், மூடப்பட்டுக் கிடந்த நெல் களஞ்சியசாலைகள் மீண்டும் திறக்கப்பட்டு, நெல் கொள்வனவுக்காக 16 பில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு கொள்வனவு செய்யப்படும் நெல்லை சதொச மற்றும் கூட்டுறவுச் சங்கங்களின் ஊடாக நேரடியாகச் சந்தைப்படுத்துவதன் மூலம், இடைத்தரகர்களின் சுரண்டலிலிருந்து விவசாயிகளையும் நுகர்வோரையும் பாதுகாக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இடைக்கால மற்றும் நீண்டகாலத் திட்டங்களின் கீழ், விவசாயிகளின் உற்பத்திச் செலவைக் குறைப்பதற்காகத் தனித்தனி நிலங்களில் விவசாயம் செய்வதைத் தவிர்த்து, கூட்டுறவு முறையில் ட்ரோன் தொழில்நுட்பம் மற்றும் நவீன இயந்திரங்களைப் பயன்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்காகச் சிறு அளவிலான நெல் ஆலைகளுக்குத் தேவையான மூலதனம் வழங்கப்பட்டுள்ளதுடன், 50 கூட்டுறவுச் சங்கங்களுக்கு நவீன நெல் களஞ்சிய வசதிகளை ஏற்படுத்துவதற்காக 500 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் கோப்-பெட் எனப்படும் கூட்டுறவுச் சம்மேளனத்தை வலுப்படுத்துவதன் ஊடாக விவசாய உற்பத்திப் பொருட்களுக்கான விற்பனை வலையமைப்பும் பலப்படுத்தப்படவுள்ளது. இத்தகைய பெறுமதிச் சேர்க்கப்பட்ட திட்டங்களின் மூலம், அடுத்த தலைமுறையினர் விவசாயத்தை ஒரு தொழிலாக மாத்திரமன்றி இலாபகரமான வணிகமாக மாற்ற முடியும்.
ஒட்டுமொத்தமாக, விவசாயிகளின் அனைத்துப் பிரச்சினைகளையும் ஒரே வருடத்திற்குள் தீர்த்துவிட முடியாது என்றாலும், அடுத்த மூன்று வருடங்களுக்குள் நாட்டின் விவசாய நிலங்களை இயற்கை விவசாயத்திற்கு ஏற்றதாக மாற்றி, குளங்களைப் புனரமைப்பதன் மூலம் சர்வதேச அளவில் இலங்கை விவசாயத்திற்குப் பெரும் பொருளாதார வாய்ப்புகளை உருவாக்க முடியும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.






.jpg)






