கைது செய்யப்பட்ட இருவரும் நீண்டகாலமாக போதைப்பொருள் கடத்தல் மற்றும் விநியோகத்தில் ஈடுபட்டு வந்ததாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இவர்களைப் பற்றிய தகவல்களை கிராம மக்கள் பலமுறை தமன பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதனையடுத்து, தமன பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதம பொலிஸ் பரிசோதகர் மனோஜ் அலஹப்பெரும தலைமையில் பல்வேறு சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்பட்ட போதிலும், சந்தேகநபர்களை கைது செய்ய முடியவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அம்பாறை பிரிவு ஊழல் ஒழிப்பு பிரிவிற்கும் கிடைத்த புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில், திட்டமிட்ட விசேட நடவடிக்கையின் மூலம் இன்று நண்பகல் குறித்த தம்பதியினர் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டபோது, ஆண் சந்தேகநபரிடமிருந்து 5,120 மில்லிகிராம் ஹெரோயினும், பெண் சந்தேகநபரிடமிருந்து 2,500 மில்லிகிராம் ஹெரோயினும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், போதைப்பொருள் விற்பனையின் மூலம் சம்பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ரூ.21,510 பணமும், விநியோக நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் மோட்டார் சைக்கிளும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
முவங்கல மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் பாடசாலை மாணவர்களை இலக்காகக் கொண்டு இந்த போதைப்பொருள் விற்பனை மேற்கொள்ளப்பட்டதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட தம்பதியினர் 37 மற்றும் 34 வயதுடையவர்கள் என்பதுடன், முவங்கல கிராமம் 8 பகுதியைச் சேர்ந்தவர்கள் என விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக தமன பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், அம்பாறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
கிழக்கு மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் வருண ஜயசுந்தர, அம்பாறை பிரதி பொலிஸ் மா அதிபர் சுஜித் வெதமுல்ல ஆகியோரின் ஆலோசனைக்கிணங்க, அம்பாறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த பண்டார கஸ்தூரி ஆராச்சி அவர்களின் மேற்பார்வையிலும், உதவி பொலிஸ் அத்தியட்சகர் சம்பத் விக்ரமரத்ன மற்றும் அம்பாறை பிரிவு ஊழல் ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் தனுஷ்க ரத்நாயக்க ஆகியோரின் வழிகாட்டுதலிலும், உப பொலிஸ் பரிசோதகர் முதித பிரியங்கர உள்ளிட்ட அதிகாரிகள் இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கையை மேற்கொண்டனர்.



.jpg)


.jpg)







