தமிழ் மக்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வே சம்பந்தனின் இறுதி இலட்சியம் – மறைந்த தலைவர் இரா.சம்பந்தனின் இரண்டாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வில் எம்.ஏ.சுமந்திரன் !



மறைந்த தலைவர் இராஜவரோதயம் சம்பந்தன் தனது ஆயட்காலத்திற்குள் தமிழ் மக்களுக்கான ஒரு நிரந்தரமான அரசியல் தீர்வு எட்டப்பட வேண்டும் என்பதில் முனைப்பாக இருந்தார் என்று இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

மறைந்த தலைவர் இரா.சம்பந்தனின் இரண்டாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு சனிக்கிழமை (11) திருகோணமலை மாநகர சபை மண்படத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வின் ஆரம்பத்தில் மறைந்த தலைவர் சம்பந்தனுக்கு மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து கட்சியின் பொதுச்செயலாளர் சுமந்திரன் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

மறைந்த தலைவர் சம்பந்தனை 1961ஆம் ஆண்டு தந்தை செல்வா அரசியலுக்கு வருமாறு அழைத்தபோது அவர் அதனை மறுதலித்திருந்தார்.அதன் பின்னர் 1970இல் மீண்டும் அழைத்தபோது அவர் அதனையும் நிராகரித்தார். ஈற்றில் 1975இல் இடைத்தேர்தலில் தந்தை செல்வாவின் வலிந்த உந்துதலால் அரசியலுக்குள் கொண்டுவரப்பட்டார். அதன்பின்னர் 1977இல் பொதுதேர்தலில் சம்பந்தன் போட்டியிடுவதற்கான விண்ணப்பத்தை கட்சிக்கு வழங்கியிருக்கவில்லை.

இருப்பினும் அமிர்தலிங்கம் சம்பந்தனுக்கான சந்தர்ப்பத்தை வழங்கினார். அதனையடுத்து அவரது அரசியல் பயணம் ஆரம்பமாகியது. அக்காலத்தில் சிறந்த சட்டத்தரணியாக இருந்த சம்பந்தன் சுமார் 700 வழக்குகளை கையாண்டு கொண்டிருந்த நிலையில் அவரால் வழக்கு விசாரணைகளுக்கு ஆஜராகும்போது அரசியல் பணிச்சுமையால் உரியவாறு தயார்ப்படுத்தல்களை செய்ய முடியாமையின் காரணமாக தொழில்முறை சட்டத்தரணி செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருந்தார்.

அத்தகையவர், நீலன் திருச்செல்வம், ஜி.எல்.பீரிஸ் ஆகியோரின் கூட்டில் உருவான அரசியல் தீர்வு வரைவை பின்னர் சந்திரிகா ஜனாதிபதியாக இருந்தபோது பிராந்தியங்களின் ஒன்றியம் என்ற பெயரில் முன்னகர்த்தியபோது, அது மலினப்படுத்தப்பட்டமைக்காக சந்திரிகாவுடன் முரண்பட்டதோடு மட்டுமல்ல, நீலனின் மரணம் இவ்வாறு மலினப்படுத்தப்பட்ட வரைவை அமுல்படுத்துவதற்காகவா என்று கேள்வி எழுப்பவும் செய்திருந்தார்.

இதேவேளை, இறுதி வரையில் தமிழ் மக்களுக்கு நிரந்தரமான தீர்வொன்றை பெற்றுக்கொடுக்க வேண்டுமென்பதில் உறுதியாக இருந்த அவர் 2015ஆம் ஆண்டு ஆட்சியில் புதிய அரசியலமைப்புக்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டபோது, முதலாவது வழிநடத்தல் கூட்டத்தில் தற்போதைய ஜனாதிபதி அநுரகுமாரவுடன் நடத்திய உரையாடல் மிகவும் முக்கியமானது.

வழிநடத்தல் கூட்டம் ஆரம்பமாகியபோது, தமிழர்களின் அரசியல் தீர்வு தொடர்பான நிலைப்பாடு என்னவென்பதை அறிவதற்கு தாம் விரும்புவதாக அநுரகுமார பகிரங்கமாக கூறினார். அப்போது சம்பந்தன் மிகத்தெளிவாக சமஷ்டி அடிப்படையிலான அதிகாரப்பகிர்வுடன் அரசியல் தீர்வு அவசியம் என்றார்.

அப்போது அநுரகுமார சமஷ்டி என்ற சொற்பதம் அவசியமா என்று கேள்வி எழுப்பினார். அதற்கு சம்பந்தன், நாம் பெயர் பலகைகளில் தொங்கிக்கொண்டிருக்கவில்லை. ஆனால் உள்ளடக்கத்தில் சமஷ்டிக் கட்டமைப்பு மிகவும் அவசியமானது என்று வலியுறுத்தினார். அதற்கு அநுரவும் இணங்கினார். அதனடிப்படையில் தான் புதிய அரசியலமைப்புக்கான ஏனைய செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.

அந்த வகையில், தற்போதைய ஜனாதிபதி அநுரகுமாரவுக்கு தமிழ் மக்களின் நிலைப்பாடு மிகத்தெளிவாகத் தெரியும் என்பதில் மாற்றுகருத்துக்கு இடமில்லை என்றார்.