அரசியல் பகடைக்காயாக பொலிஸாரை பயன்படுத்துவதாக அரசாங்கம் மீது நாமல் ராஜபக்ஷ குற்றச்சாட்டு


அரசாங்கம் தனது ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள பொலிஸாரை அரசியல் பகடைக்காயாகப் பயன்படுத்தி வருவதாக குற்றஞ்சாட்டிய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, பொலிஸார் ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியின் கிளை போலச் செயல்படும் போது, அது நாட்டின் நீதித்துறை அமைப்பிலும் செல்வாக்குச் செலுத்துகிறது என்றும் சுட்டிக்காட்டினார்.

அரசாங்கம் தற்போது விவசாயிகள் மற்றும் மீனவர்கள் எதிர்கொள்ளும் அன்றாடப் பிரச்சினைகள் குறித்தோ அல்லது நாட்டில் நிலவும் இளைஞர்களின் வேலையில்லாத் பிரச்சினை குறித்தோ எவ்வித கவனமும் செலுத்தவில்லை. நாட்டின் அடிப்படை கலாச்சார விழுமியங்களைப் பாதுகாக்கும் அதேவேளையில், குருட்டுத்தனமான மேலைத்தேயமயமாக்கலுக்கு உட்படாமல் நவீனத்துவத்தை நோக்கி நகர வேண்டும்.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பிருந்த நிலைகளுக்கப்பால், பொதுஜன பெரமுன தற்போது 2035, 2040 மற்றும் அதற்குப் பிந்தைய எதிர்காலச் சந்ததியினரின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யக்கூடிய ஒரு நவீன அரசியல் சக்தியாகத் தன்மயப்படுத்தப்பட்டுள்ளது. தற்போதைய அரசாங்கத்தைப் போல முரண்பாடான கொள்கைகளைச் செயல்படுத்தாமல் தெளிவான நடைமுறை வேலைத்திட்டத்துடன் எமது கட்சி செயல்படும்.

எனவே, புத்திஜீவிகள், தொழிலதிபர்கள், விவசாயிகள் மற்றும் மீனவர்கள் அனைவரின் கருத்துக்களையும் உள்ளடக்கி, நாட்டின் எதிர்காலத்தையும் அடுத்த தலைமுறையின் வாழ்வையும் மாற்றியமைக்கக்கூடிய சக்திவாய்ந்த தொலைநோக்குத் திட்டம் ஒன்றை உருவாக்கும் முயற்சியில் இணைந்து செயல்படுமாறு அழைப்பு விடுக்கின்றோம் என்றார்.