
தற்போதைய காலகட்டத்தில் போதைப்பொருள் பாவனையானது ஒட்டுமொத்த சமூகத்தையும் சீரழிக்கும் ஒரு பெரும் புற்று நோயாக உருவெடுத்துள்ளது. தற்போதைய சூழ்நிலையில் நண்பர்கள் மூலம் போதைக்கு அடிமையாகுவதை விடுத்து இணையம் மற்றும் சமூக ஊடகங்கள் வழியாக பரப்பப்படும் தேவையற்ற விளம்பரங்களும், தவறான வழிகாட்டுதல்களுமே இளைஞர்கள் மத்தியில் போதைப் பழக்கம் அதிகரிப்பதற்கு காரணமாக அமைந்துள்ளது என்று சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரான அஜித் ரொஹன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் புதன்கிழமை (15) அரச தொலைக்காட்சியில் நடைபெற்ற நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
இதற்கு முன்னைய காலங்களில் நண்பர்கள் மற்றும் தங்கள் வயதிலும் மூத்தவர்கள் மூலமாகவே ஒருவர் போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையாகி வந்த நிலை மாறி, தற்போது இணையம் மற்றும் சமூக ஊடகங்கள் வழியாக பரப்பப்படும் தேவையற்ற விளம்பரங்களும், தவறான வழிகாட்டுதல்களுமே இளைஞர்கள் மத்தியில் இப்பழக்கம் வேகமாகப் பரவுவதற்கு முதன்மைக் காரணியாக அமைந்துள்ளதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இலங்கையில் 1979ஆம் ஆண்டளவிலேயே முதன்முதலில் இத்தகைய போதைப்பொருட்கள் ஊடுருவத் தொடங்கின. அக்காலத்தில் சில இயற்கை சார்ந்த போதைப்பொருட்களே பயன்படுத்தப்பட்ட போதிலும், தற்போது இரசாயன முறையில் தயாரிக்கப்படும் அபாயகரமான செயற்கை போதைப்பொருட்களின் (Synthetic Drugs) புழக்கம் பாரிய அளவில் அதிகரித்துள்ளது.
ஆரம்பத்தில் போதைப்பொருள் பாவிப்பவர் தனது பணத்தைச் செலவழித்துத் தனது உடலையும் உயிரையும் மாத்திரமே கெடுத்துக்கொள்கிறார் என்ற பொதுவான கருத்து நிலவியது. ஆனால், தற்போதைய பொருளாதாரச் சூழலில் செயற்கை போதைப்பொருட்களின் விலை மிக உச்சமடைந்துள்ளது. ஒரு நாளைக்கு இருமுறை போதைப்பொருள் பயன்படுத்தும் ஒருவருக்குச் சராசரியாக 8,000 ரூபா வரை செலவாகிறது.
இதன் அடிப்படையில் கணக்கிட்டால், ஒரு மாதத்திற்குப் போதைப்பொருளுக்கு மாத்திரம் சுமார் ரூ240,000 அதிகமான தொகை தேவைப்படுகிறது. ஒரு சாதாரண குடிமகனின் மாதாந்த சம்பளத்தை விடவும் இது மிக அதிகம் என்பதால், இந்தப் பணத்தைத் திரட்டுவதற்காகப் போதைப்பொருள் பாவனையாளர்கள் வீடுகளை உடைத்துக் கொள்ளையடித்தல், பெண்களின் நகைகளை திருடல், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் வாகனங்களின் பாகங்களை திருடுதல் போன்ற பாரதூரமான குற்றச்செயல்களில் ஈடுபடுகின்றனர்.
இதைத் தவிர, போதைப்பொருள் பாவனையால் குடும்ப வன்முறைகள் அதிகரித்து வருவதுடன், தங்களின் சொந்தப் பெற்றோரையும் உறவினர்களையும் கொலை செய்யும் மிக கொடூரமான கலாச்சாரம் சமூகத்தில் ஊடுருவியுள்ளது. அண்மையில் எம்பிலிபிட்டிய பகுதியில் தாய் மற்றும் தந்தை ஆகிய இருவரையும் அவர்களது மகனே கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் இதற்கு ஒரு சான்றாகும்.
பொலிஸார் மேற்கொண்ட தீவிர விசாரணைகளின் போது, அந்த இளைஞன் கொடூரமான செயற்கை போதைப்பொருட்களுக்கு அடிமையானவர் என்பது கண்டறியப்பட்டுள்ளது. இத்தகைய சமூகக் குற்றங்களின் உச்சக்கட்டமாக, போதைப்பொருள் பாவித்த நிலையில் வீதிகளில் வாகனங்களைச் செலுத்தும் ஓட்டுநர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
போதைப்பொருள் தலைக்கேறிய நிலையில் வாகனங்களைச் செலுத்துபவர்களால் வீதிகளில் எப்போது, எந்த மாதிரியான பேரழிவுகள் மற்றும் கொடூர விபத்துகள் சம்பவிக்கும் என்பதை வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவுக்கு நிலைமை மோசமடைந்துள்ளது என்றார்.






.jpg)






