சமூக வலைத்தளங்களில் வைரலான காணொளியைத் தொடர்ந்து, அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை பகுதியில் ஆபத்தான முறையில் மோட்டார் சைக்கிள்களைச் செலுத்தி பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் இடையூறு விளைவித்த இளைஞர்கள் குழுவொன்றை சம்மாந்துறைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களுடன், அவர்கள் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள்களும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
அண்மையில் சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பகிரப்பட்ட காணொளியில், சில இளைஞர்கள் தலைக்கவசம் அணியாமல், ஒரே மோட்டார் சைக்கிளில் மூன்று மற்றும் நான்கு பேர் வரை பயணித்ததுடன், பிரதான வீதியில் ஆபத்தான முறையில் சாகசம் செய்து, ஏனைய வாகனங்களின் போக்குவரத்திற்கும் பொதுமக்களின் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருந்தனர்.
இந்தக் காணொளியை ஆதாரமாகக் கொண்டு விசாரணைகளை ஆரம்பித்த சம்மாந்துறைப் பொலிஸார், போக்குவரத்து மற்றும் மோட்டார் வாகனச் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டின் கீழ் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களைக் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் மீது தலைக்கவசம் அணியாமல் வாகனம் செலுத்துதல், ஒரே மோட்டார் சைக்கிளில் மூன்று முதல் நான்கு பேர் வரை பயணித்தல், பிரதான வீதியை மறித்து ஆபத்தான முறையில் சாகசம் செய்தல் உள்ளிட்ட பல்வேறு போக்குவரத்து விதிமீறல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
சம்மாந்துறைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் நிசாந்த பிரதீப் குமார பொறுப்பேற்ற பின்னர், பிரதேசத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்கும் குற்றச்செயல்களை கட்டுப்படுத்துவதற்குமான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எதிர்காலத்திலும் பொதுமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் வகையில் வீதிகளில் ஆபத்தான முறையில் வாகனங்களைச் செலுத்துவோர் மற்றும் சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள் தொடரும் எனவும் பொலிஸார் எச்சரித்துள்ளனர்.
இந்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை, கிழக்கு மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜயசுந்தர, பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வேதமுல்ல மற்றும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கஸ்தூரி ஆராச்சி ஆகியோரின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் கீழ் முன்னெடுக்கப்பட்டது.
சம்மாந்துறைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் நிசாந்த பிரதீப் குமாரவின் மேற்பார்வையில், போக்குவரத்துப் பிரிவு பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் விஜயவர்தன, குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் சமீர உள்ளிட்ட பொலிஸ் அதிகாரிகள் இணைந்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர்.







.jpg)






