
விவசாய சமூகத்தை பாதுகாக்கத் தவறினால், எமது ஒட்டுமொத்த தேசத்தினதும் அழிவு ஆரம்பமாகும் என எல்லே குணவங்ச தேரர் எச்சரித்துள்ளார்.
விவசாய அமைப்புகள் சிலவற்றினது பிரதிநிதிகள் நேற்று செவ்வாய்க்கிழமை (14) கொழும்பில் உள்ள தர்மாயதனத்துக்குச் சென்று, தேரரைச் சந்தித்து கலந்துரையாடினர்.
தற்போதைய சூழ்நிலையில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் விவசாயிகள் எதிர்நோக்கி வருகின்ற வாழ்வாதாரப் பிரச்சினைகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே தேரர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
தற்கால அமைச்சர்கள் 'விவசாயி அரச பதவிக்கு தகுதியானவர்' என்ற கூற்றுக்குக் கொடுக்கும் விளக்கங்களைப் பார்க்கும்போது, இவர்கள் எமது நாட்டின் வரலாற்றைக் கூட படித்ததில்லை என்பது புரிகின்றது. அன்று எமது வரலாற்றில் விவசாயி அரச பதவிக்கு தகுதியானவன் என்று போற்றப்பட்டதற்குக் காரணம், அவன் பஞ்சசீலக் கொள்கைகளைப் பின்பற்றி, அறநெறி வழுவாமல் வாழ்ந்தமையாகும். அந்த உன்னதமான கலாச்சாரத்தின் பின்னணியில்தான் விவசாயி அரச பதவிக்கு தகுதியானவனாக உயர்ந்தான்.
நாட்டின் முதுகெலும்பாக விளங்கும் விவசாய சமூகத்தை நாம் பாதுகாக்கத் தவறினால், எமது தேசத்தினது அழிவு அந்த இடத்திலிருந்தே ஆரம்பமாகும். இன்று எமது நெற்பயிர்கள் அனைத்தும் அழிவடைந்து போகின்ற அவலநிலை ஏற்பட்டுள்ளது.
விவசாயி என்பவன் அழுதுகொண்டே வீதிகளில் அலைந்து திரிய வேண்டிய மனிதன் அல்ல. இன்று உரிமைக்காக வீதிகளில் இறங்கிப் போராடுகின்ற இந்த மனிதனைப் பார்த்தா அன்று அரச பதவிக்கு தகுதியானவன் என்று கூறினார்கள்?
இன்று நாட்டின் ஜனாதிபதியும் ஒரு விவசாயியின் மகனாகவே இருக்கின்றார். ராஜபக்ஷக்களும் தாங்கள் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், விவசாயிகளின் வயல் வரம்புகளில் கைகளைக் கழுவியவர்கள் என்றும்தானே கூறிக்கொள்கிறார்கள்? அப்படியாயின், வெறும் வார்த்தைகளோடு நின்றுவிடாமல், அந்த விவசாயப் பின்னணியை உணர்ந்து உரிய நடவடிக்கைகளை ஆட்சியாளர்கள் உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும். விவசாய சமூகத்துக்கு மேலும் கண்ணீர் சிந்துவதற்கு இடமளிக்காமல், அவர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வைக் காண்பதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றார்.






.jpg)






