நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவப் பொறுப்பில் இருந்து அரசு தப்ப முடியாது – நாமல் ராஜபக்ஷ
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவத்தை அதிகாரிகள் மீது சுமத்திவிட்டு அரசாங்கம் தப்பித்துக்கொள்ள முயற்சிக்கக்கூடாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (24)நடைபெற்ற நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவம் தொடர்பில் தான் பொறுப்பேற்பதாக நீதி அமைச்சர் கூறினார். ஆனால் பொறுப்பேற்பதாக மட்டும் கூறி விலகிச் செல்ல முடியாது. 30 பேர் உயிரிழந்துள்ளனர்.
இது தொடர்பில் புலனாய்வு அறிக்கை கிடைத்ததா? பாதுகாப்புச் சபையில் ஜனாதிபதிக்கு அறிவிக்கப்பட்டதா? அவ்வாறு அறிவித்திருந்திருந்தால் ஜனாதிபதி எடுத்த நடவடிக்கை என்ன? இராணுவம், பொலிஸார், புலனாய்வுப் பிரிவினருக்கு இது தொடர்பான விளக்கம் இருக்கவில்லையா?
அரசியல் விடயம் என கூறி தப்பித்துக்கொள்ள முடியாது. நீங்கள் ஆட்சிக்கு வந்து இரண்டு வருடங்கள் ஆகியுள்ளன. சிறைச்சாலைகள் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்களை நீங்கள் ஆட்சிக்கு வந்ததும் நிறுத்தியுள்ளீர்கள். அது தொடர்பான சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் முன்வைக்காமல் இருக்கின்றீர்கள்.
சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பான பொறுப்பை அதிகாரிகள் மீது சுமத்திவிட்டு அரசாங்கம் தப்பித்துக்கொள்ள முடியாது. விசாரணைகளில் துப்பாக்கிச் சூட்டை நடத்தியவர்களை பிடிப்பதாக கூறுகின்றீர்கள். இது தொடர்பான வழக்குகளை விசாரியுங்கள்.
இதனை அரசியலாக்க வேண்டாம் நீதிமன்றங்களுக்கு நீதிபதிகளை நியமிப்பது தொடர்பில் தாமதம் ஏற்பட்டுள்ளது. உங்களுக்கு 159 பேர் இருக்கின்றனர் என்று செயற்படக்கூடாது.
சிறைச்சாலைகளில் பல குறைபாடுகள் காணப்படுகின்றன. அதனை நிவர்த்தி செய்ய எமது அரசாங்க காலத்தில் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டபோதும் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பித்து அனுமதித்துக்கொள்ள முடியவில்லை. ஆனால் நீங்கள் ஆட்சிக்கு வந்து இரண்டு வருடங்கள் கடந்தும் அதனை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்காமல் இருக்கிறீர்கள். சிறைச்சாலை வைத்தியசாலையில் அத்தியாவசிய மருந்துப் பொருட்கள் இல்லை.
நீதிமன்றங்களின் நீதிபதிகளின் சேவைக்காலத்தை நீடிப்பதன் மூலம் வழக்கு விசாரணைகள் விரைவாக நிறைவடையப்போவதில்லை. அதற்கு நீதிமன்ற நடவடிக்கைகளை விரிவுபடுத்தவேண்டும். நீதிமன்றங்களுக்கு இணைந்துகொள்ள நாட்டில் போதுமானளவு சட்டத்தரணிகள் இருக்கிறார்கள். அவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கவேண்டும் என்றார்.










.jpg)


.jpg)
