முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் மீண்டும் ஒன்றிணைவது அரசாங்கத்திற்கு எந்தவித சவாலையும் அல்லது தாக்கத்தையும் ஏற்படுத்தப்போவதில்லை. ரணில் விக்கிரமசிங்க தன்னை மீண்டும் தலைவராகவும், சஜித் பிரேமதாசவை தனக்குக் கீழ் செயல்படும் சீடராகவும் மாற்றவே இச்சந்திப்புகள் ஊடாக முயல்கிறார் என்று அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் சனிக்கிழமை (25) ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
முன்னர் இவர்கள் இருவரும் ஒன்றாக இருந்தபோதே எதையும் சாதிக்க முடியாமல் பிரிந்து சென்ற நிலையில், தற்போது மீண்டும் இணைவதால் புதிதாக எதையும் செய்துவிட முடியாது. இதனை ஒரு சமமான கூட்டிணைவாகப் பார்க்க முடியாது.
சந்திப்பின் போது ரணில் விக்கிரமசிங்க கட்டளைகளைப் பிறப்பிக்க, சஜித் பிரேமதாச அவற்றை அமைதியாகக் குறிப்பெடுத்துக் கொண்டிருப்பதே தெரிகிறது. ரணில் விக்கிரமசிங்க தனது அரசியல் அனுபவத்தைப் பயன்படுத்தி அங்கு தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்தித் தன்னைத் தலைவராகக் காட்டிக்கொண்டுள்ளார்; சஜித்தை இரண்டாம் இடத்திற்கும் கீழே தள்ளிவிட்டார்.
அத்துடன், இச்சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த நபர்களைக் கவனித்தால், அங்கிருந்த அனைவரும் ஏதேனும் ஒரு வழக்கில் தொடர்புடையவர்களாகவோ, பிணையில் உள்ளவர்களாகவோ அல்லது சந்தேகநபர்களாகவோ மட்டுமே இருக்கிறார்கள்.
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு மற்றும் நீதிமன்றங்கள் மூலம் விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டு, வழக்குகள் தொடரப்பட்டு வரும் நிலையில், எதிர்க்கட்சியினரின் சட்டவிரோதச் செயல்கள் மற்றும் குற்றப் பின்னணிகள் வெளிச்சத்திற்கு வரத் தொடங்கியுள்ளன.
இவ்வாறான குற்றச்சாட்டுகளிலிருந்து தப்பிக்கும் நோக்கிலும், பயத்திலுமே சஜித், ரணில், நாமல் போன்றோர் பதற்றமடைந்து ஒன்றாகச் சந்திக்கத் தொடங்கியுள்ளனர் என்றார்.








.jpg)



.jpg)

